பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 எனவே அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப, தான் வாழவும், சமுதாயம் மேம்படவும் நற்செயல்களைச் செய்து பலன் பெறவேண்டும். மனித குலம் மேன்மையடைய, மாண்புபெற வினையாற்றி, நல்ல விதைபோல் மண்ணில் மறையவேண்டும். ஆத்மசாதனத்தில் ஞானமார்க்கத்தினை நெருப்போடும் பக்தி மார்க்கத்தினை நீரோடும் சீர்தூக்கிச் சொல்வது உண்டு. ஞான நெருப்பு கர்மம் என்னும் விறகுக் கட்டையைப் பொசுக்கிச் சாம்பலாக்குகிறது. பக்தி என்னும் சுகவாரி உயிர் வாழ்க்கையின்மேல் கொண்டுள்ள நாட்டத்தைக் கரைக்கிறது. தன்மயமாக்குகிறது. பரம்பொருளைச் சுகவாரி அல்லது ஆனந்தக் கடல் எனலாம். பக்தியில் திளைத்துள்ள ஜீவாத்மன் பரம்பொருள் என்னும் ஆனந்தக் கடலிலே மூழ்கி விளையாடும் சர்க்கரைப் பொம்மைக்கு ஒப்பாகிறான். சர்க்கரைப் பொம்மை நீரில் தன் வடிவத்தை இழக்கிறது. அதுபோலப் பக்தனும் சுகவாரியின் தன் ஆத்ம போதத்தைக் கரைத்துவிடுகிறான். கண்ணீரில் இரண்டு தரமுண்டு. ஒன்று துன்பக்கண்ணீர், மற்றொன்று இன்பக்கண்ணீர். துன்பக்கண்ணீர் பிறவியைப் பெருக்குகிறது. பரமனிடம் பக்தி பூண்டு சிந்துகின்ற இன்பக் கண்ணீர் பாபங்களைத் துடைத்துத் தள்ளுகிறது. கரும மூட்டை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பக்தியினால் பெருக்கெடுக்கின்ற ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகிக் கரும மூட்டைகளை எல்லாம் தூக்கிக்கொண்டு போகிறது. கருமம் நீங்கப் பெறுகிற அளவு ஆத்ம சாதகன் புண்ணியன் ஆகிறான். பரம்பொருள் கருமத்திற்கு அப்பாற்பட்டது. கர்மத்தையெல்லாம் பக்தியினால் ஒதுக்கித் தள்ளிய ஆத்மசாதகனும் கர்மத்திற்கு அப்பால் வந்துவிடுகிறான். பின்பு அவன் பரத்தில் ஒன்றுபடுகிறான். ஆதலால் பரத்தில் ஒன்றுபட்டு முக்தனாவதற்கு இன்பக்கண்ணீர் மயமாய் இருக்கிற தீவிர பக்தியானது சிறந்தவழியாகும்.