பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 131 பெரிய நூல்கள் வாழ்க்கையை இரண்டாகப் பகுத்துப் பார்ப்பதில்லை. ஆகையால் மனிதன் செய்யும் கர்மத்தை மேலானது என்றும் கீழானது என்றும் பேதப்படுத்திப் பார்ப்பது இல்லை. நல்வாழ்க்கை வாழத் தெரிந்து கொண்டவன் ஒருவன் எல்லாவிதமான கர்மங்களையும் ஆத்ம சாதனத்துக்கு உரியவையாக்கலாம். நல்ல முறையில் வாழத்தெரியாதவன் கடவுள் வழிபாடு போன்ற புனிதமான மேலான கர்மத்தைக் கெடுத்துப் பந்த பாசத்திற்குரியதாக்கி விடலாம். வினைகளை எல்லாம் மேலாம் வினைகளாக மாற்றவல்லவை நற்றமிழ் இலக்கியங்களாகும். மிகவும் குறிப்பாகக் கூறுவது எனில் திருக்குறள் இந்த இரசவாத வித்தையில் முதலிடம் பெறும் நூலாகும். உலகம் போற்றும் ஞானநூல் ஆகும். மன அமைப்பில், செயல், உணர்வு அறிவு என்ற மூன்று பகுதிகள் இருக்கின்றன. உளநூல் வல்லுநர் அவற்றை (Will, emotion, cognition) என்று கூறுவர். மனத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்றும் கொலுவிருக்கின்றன என்பது தெரிந்ததே. மனதில் இந்த மூன்று வித மாண்புகளும் ஒருங்கே தொழிற்படுதல் அல்லது மிளிருதல் வேண்டும். அப்பொழுது மனிதப் பண்பாடு நிறைவு பெறுகிறது. மனிதன் திண்ணியன் ஆவதற்கு அதுவே உற்ற வழியாகும். நல்ல உள்ளத்துக்கு உரிய மூன்று பண்புகளையும், கூறுகளையும் முறையே எடுத்துக்காட்டி விளக்குவதால் திருக்குறள் எல்லார்க்கும் உரிய நூலாகிறது. மற்ற நற்றமிழ் இலக்கியத் தடங்களும் திருக்குறளில் ஒன்றி விடுகின்றன. தமிழ் இலக்கியங்களின் குறிக்கோள், மற்றும் தமிழ் நூல்களில் காணலாகும் தத்துவக் கருவூலங்களின் கோட்பாடு மனிதனை நிறைமனிதன் ஆக்குவதே. உறுதியான உடலும், உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறைவாழ்விற்கு. நிறை நிலைக்கு இன்றியமையாது வேண்டப்படுவன ஆகும். பேராற்றல் பெற்றிருப்பது முதல் தேவை. ஒழுக்கம் உயர்ந்த ஆற்றலில் அடங்கி விடுகிறது. நன்மையைச் செய்யவும் செய்விக்கவும் ஆற்றல் பெற்றவனுக்கே முடியும். அடுத்த கோட்பாடானது அன்பு. உயிர்க்குலம் அனைத்துக்கும் அன்பு பொதுவானது. அன்பைத் தூய அன்பாக மாற்ற உதவிபுரிவது பக்தியின் நோக்கம் எனலாம். தூய அன்பிலிருந்து இனிமையானவை அனைத்தும் தோன்றும். எல்லாவற்றையும் ஒன்றுபடுத்துவது தாயன்பு போன்ற தூய அன்பாகும். உலகில் உள்ள உயிர்கள் யாவும் தூய அன்புடையவனுக்குச் சொந்தமாகி விடுகின்றன.