பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆராய்ச்சிகளின் விளைவைக் கற்பனையில் பெருக்கிப் பார்த்தவர் மருண்டு போயினர். மருண்டவர் எதிர்க்கின்றனர். இதன் பயனை அறிந்தவர் வரவேற்கின்றனர். எதிர்ப்பதும் ஆதரிப்பதுமான முரண்பாடான நிலைகள் எப்போதும் எங்கும் இருக்கின்றன. முரண்பாடுகள் வளர்ச்சிக்கே வழிவகுக்கின்றன எனின் வரவேற்கத்தக்கதே. இயற்கையின் படைப்பில் மிகவும் மேலானவன் மனிதன். பிறவிலங்குகள் தொடக்கக் காலந்தொட்டு இருந்தபடியே இருக்கின்றன. ‘நான்’, ‘என்னுடையது', 'எதிர்காலம்' என்ற அறிவு பிற உயிர்களிடத்தில் இல்லை. 'நான்' என்ற தனது இருப்பை அறிகின்ற உணர்வும் 'என்னுடையது என்ற உரிமை உணர்வும்' 'நேற்று', 'இன்று'. 'நாளை' என்ற உணர்வும் மனிதனிடம் இருந்ததால்தான் பலதுறையிலும் திருத்தம் பெற்று வளர்ந்து வரமுடிந்தது. மனிதன் தவிர்த்த பிற உயிர்களிடம் 'மனம்' என்ற ஆறாவது அறிவு இல்லை. ஆதலால் வினையும், வினைப்பயனும் என்ற பிணிப்பும் தொடர்ச்சியும், பாவம், புண்ணியம் என்ற காரியங்களும் காரணங்களும் இல்லை. இவற்றின் வாழ்க்கை 'உடல் ஊழ்' என்ற தத்துவத்தின் படியே நடக்கின்றன. உடல் ஊழுக்கு அப்பாலும் வாழ்க்கையில்லை. இப்பாலும் வாழ்க்கை இல்லை. அருந்துதலும் பொருந்துதலும் என்ற அளவில் வாழ்க்கை வட்டம் சுழல்கின்றது. மனிதனுக்கு ‘மனம்' என்ற ஆறாம் அறிவால் நன்மையும், தீமையும் வந்து சேருகின்றன. விலங்குகட்கு இருக்கின்ற ‘உடல் வாழ்' என்ற தத்துவமும், 'வினை ஊழ்' என்ற தத்துவமும் அவன் வாழ்க்கையை இரட்டை மாட்டு வண்டி போல் இழுத்துச் செல்கின்றன. உடல் ஊழும், வினை ஊழும் ஒன்றுக்கொன்று ஒத்து இழுக்கும்போது 'மனித வாழ்க்கை' என்னும் வண்டி ஒழுங்காகச் சென்று, சேர வேண்டிய இடத்தை அடைகிறது. இவை இரண்டும் ஏறுமாறாக நடந்தால், 'கட கட வண்டி லொட லொட வண்டி, மாடு ரெண்டும் சண்டி வண்டிக்காரன் நொண்டி' என்ற கதையாய்ப் பயணம் பெரும்பாடாகி விடுகிறது.