பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உடல் தத்துவம் விலங்கினங்களின் அறிவு பகுத்தறியும் உணர்வோடு கூடாமல், உலகத்துப் பொருள்களை மட்டும் அறிவிக்கும் ஐம்புலன்களோடு இயைந்து நிகழ்கிறது. எனவே பசியெடுத்தால் உணவைத் தேடி உண்டு பசி ஆறுதலும், பருவம் வாய்ந்தபோது காமம் மிகுந்து பொருந்திக் களித்தலும் எனக் காலம் கழிக்கின்றன. விலங்கினங்களின் அறிவு புறப்பொருள் பற்றிய புற அறிவாய் மிகச் சிறியதாய் இருத்தலின் அவற்றின் அறிவு 'சிற்றறிவு' எனப்படுகிறது. எனவே அவை அடையும் இன்பமும் மிகச்சிறியதாகவே இருக்கும். அது 'சிற்றின்பம்' ஆகும். மனிதன் அறிவு புறத்தே உள்ள உலகத்துப் பொருள்களை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி வாயிலாக அறிவதுடன் அங்ஙனம் அறிந்தவற்றைத் தமது அகத்தே கொண்டுபோய் வைத்து 'இது நல்லது, இது தீயது' எனவும் 'இஃது இதனை ஒக்கும், இஃது இதனை ஒவ்வாது வேறுபட்டது' எனவும் பகுத்துணர வல்லதாயும் இருக்கிறது. ஆகவே விலங்கினங்களின் அறிவை விட எத்தனையோ பெரிதான இவ்வகப்புற அறிவால் வரும் இன்பமும் அச்சிற்றுயிர்கள் எய்தும் இன்பத்திலும் எத்தனையோ மடங்கு பெரியதாய்த் திகழ்கின்றது. அகப்புற அறிவால் பேரறிவு பெற்றுள்ள மனிதன் புற அறிவை மட்டுமே பெற்றுள்ள விலங்கின வாழ்க்கையினின்று மேம்பட முடிந்தது. மாங்கனி ஒன்றைக் குரங்கு தின்றது எனின் தின்று பசி அடங்கிய அளவிலே அதன் முயற்சி நின்றுவிட்டது. மாங்கனியின் சுவை, பலாப்பழத்தின் சுவையைவிட வேறுபட்டது என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமே தோன்றக்கூடியது. வேறுபடுத்திப் பார்த்தலும், பகுத்துப்பார்த்தலும் போன்ற முயற்சிகள் அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டன. அறிவு வளர்ச்சியில் வாழ்க்கை முறையில் தெளிவு பிறந்தது. தெளிவின் விளைவாகக் குடும்பம், பிள்ளைகள், பொறுப்பு. தொழில் என்பவை படிப்படியாக வந்து சேர்ந்தன. மனிதன் மட்டுமே தொழில் புரிகின்றான். தொழில் புரிய நேர்ந்ததால் கூடவே