பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.மனம் என்னும் தத்துவம் மானுட சரீரத்தின் ஐந்து கோசங்களில் (அடுக்குகளில் அன்னமய கோசம் முதலாவது. பிராணமயகோசம் இரண்டாவது. மூன்றாவது மனோமயகோசம். மனத்தினால் ஆன அடுக்கு அல்லது உறை என்று கூறப்படும். உலகத்தில் காணப்படும் பல்வேறு முரண்பாடுகளுக்கும், பிணக்குகளுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் மூலமாக இருப்பது மனமே. மனம் ஒரு குரங்கு என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். மனத்தைப் பார்த்து "மனமெனும் பேய்க்குரங்கே மருட்டாதே கண்டாய்" என்று எச்சரித்தார். பிறரும் பலரும் மனம் ஒரு குரங்கு போல் மேலும் கீழும் தாவும் என்கின்றனர். 'ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம்' என்று தாயுமானவர் தம் பராபரக் கண்ணியில் மனத்தின் குரங்கியல்பை அழகாகக் கூறுகிறார். எனவே மனத்தைப் பற்றி ஆதியோடந்தமாக அறிவது மிகவும் அவசியமாகும். பிராணனும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பிராணனே மேல்சட்டை என்றும் அல்லது மனத்தை இழுத்துச் செல்லும் ஊர்தி என்றும் சொல்லப்படுகிறது. பிராணன் இருக்குமிடத்தில் மனம் இருக்கும். ஏதாவது ஒரு பொருளின் மேல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தால் மூச்சுவிடுவது மெதுவாகி விடுகிறது. பிராணவாயுவின் குறைவால் திக்குமுக்காடல் உண்டாகும்போது மனத்தின் வீச்சு குறைந்து விடுகிறது. மனத்தைப் பாகனென்றும், பிராணனைக் குதிரையென்றும் சரீரத்தைத் தேரென்றும் நூல்கள் கூறுகின்றன. பிராணன் இயங்க மனம் அசைகின்றது. நினைக்கின்றது. பிராணன் கட்டுப்பட்டால் மனம் கட்டுக்குள் அடங்குகிறது. அவ்விதமே மனம் அடங்கினால் பிராணனும் மட்டுப்படும்.