பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 செடிகளுக்கு உயிர் இருக்கிறது. விலங்குகளுக்கு இந்திரிய உணர்ச்சியும் இருக்கிறது. இவற்றோடு மனிதனுக்கு மனோபாவம் இருக்கிறது. ஆத்மா அல்லது 'உயர்ந்த நான்' என்பதுதான் மனத்திற்கு ஆதாரம். ஆத்மாவுக்கு மாயையினிடமாக மனம் பிறந்தது என்பது சமயவாதிகள் கூற்று. இவ்வுலகில் மனம். மிக உயர்ந்த சக்தியாக விளங்குகிறது. தன் மனத்தை எவன் கட்டுப்படுத்துகிறானோ அவனிடம் சக்திகள் அனைத்தும் காணப்படுகின்றன. அவனால் எல்லோர் மனத்தையும் தன்வசமாக்க முடியும். வியக்கத்தக்க ஆற்றலும் சக்தியுமுடையது மனம். அபாரமான சூக்கும சக்திகள் வாய்ந்த மனத்திற்கு ஆத்மாதான் ஆதாரம். மனம் ஒரு ஜடப்பொருளே. அப்பொருள் மிகவும் சூக்குமமாக இருக்கிறது. அது சூக்குமமான பஞ்சபூதங்களால் உண்டாக்கப்பெற்றது. நிறைந்து நிற்பதும் எங்கும் பரந்துள்ளதுமான ஆத்மாவானது தன்னுடைய கற்பனையாற்றலால் முகந்து கொண்ட உருவமே மனம். மனம் படைக்கும், அழிக்கும். தன் கற்பனா சக்தியால் உலகம் முழுவதையும் உண்டாக்கும். கற்பனை செய்வதுதான் மனத்தின் முதன்மையான குணமாகும். எத்தகைய சுகதுக்கங்களுக்கும் அதுவே மூலம். அம்மனமே எதனையும் அனுபவிக்கின்றது. கட்டுக்கும் விடுதலைக்கும் அல்லது பந்தமோட்சங்களுக்கும் அம்மனமே ஏதுவாகிறது. ஆதலின் மனமே எல்லாம். ஒவ்வொன்றும் மனம். ஒருவனுடைய உற்ற நண்பனும், பிறவிப் பகைவனும் மனமேயாகும். சாதாரண மனமே விரோதி பல்வகைப் பேறுகளுக்கும் அதுவே காரணம். இழிந்த விருப்பங்களால் நிரம்பிக் கிடக்கும் மனம் மேன்மையை அடைய வழிகாட்டாது. உயர்ந்த மனம் நல்வழிகாட்டும் ஞானகுரு. தூய மனத்தின் குரல் கடவுளின் குரல். ஒரு மனிதன் தன் மனத்தினாலேயே, மனோபாவத்தினாலேயே நாள்தோறும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். உயர்வுக்கு உற்ற உத்தியும் ஆகும். எனவே மனத்தைச் சக்தியற்றதாக்கிவிடக் கூடாது. தன்னை வென்றவனுக்கு மனம் நண்பனாகும். தன்னிடம் தோற்றவனுக்குப் பகைவனாகும். குடும்பம் என்னும் கடலைக் கடப்பதற்கு அடக்கம் என்னும் மரக்கலத்திற் சிறந்ததொன்றும் இவ்வுலகில் இல்லை. ‘மன அடக்கம்' சிறந்த உறுதிப்பொருளாகும். அதனைப் போற்ற வேண்டும். மன அடக்கத்தைக் காட்டிலும் சிறந்த செல்வம் வேறு இல்லை.