பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மன அடக்கம் இப்பிறப்பில் மட்டுமின்றி இனிவரும் பிறவிகளிலும் நன்மையைத் தரும். மன அடக்கம் பணம் உடையவர்களுக்கு மற்றுமொரு உயர்ந்த செல்வமாக விளங்கும். ஒருவன் மன அடக்கத்தோடு வாழ்வானாயின் அவ்வடக்கம் அவனை விண்ணுலகத்தில் செலுத்தும். அடங்காமை கொடிய நரகத்தின் கண் தள்ளும். இவ்வாறு திருவள்ளுவர் கூறுகிறார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். (குறள் 121) ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 126) மனமே தூல உலகமாய்த் தோன்றுகிறது. அதுவே சூக்குமமானால் அறிவு. தூலமானால் உலகம். கண்ணில் காணலாகும் பொருள்கள் யாவும் மனமே. காணப்பெறும் வேற்றுமைகளும் மனத்தின் செயலே. இப்பரந்த உலகம் ஆத்ம சங்கல்பத்தினாலேயே பிரகாசிக்கின்றது. எவ்விடத்தில் மனம் இருக்கிறதோ அவ்விடம் இவ்வுலகமாகும். ஒருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது மனம் காணப்படுவதில்லை. ஆகையால் அப்பொழுது உலகமும் இல்லை. பொருள்களைப் பற்றிய எண்ணங்கள் வளர வளர உலகம் உண்மையாகவே இருக்கிறது என்ற எண்ணமும் உறுதிப்படும். அதாவது இந்திரிய விஷயங்களில் ஆசை பெருகும்போது உலகம் உண்மையாக இருக்கின்றது என்னும் மனோபாவமும் வளர்ந்து வரும். மனத்தில் மூவகைச் சக்திகள் இருக்கின்றன. அவைதாம் இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்பவை. மனத்தில் ஒரு விருப்பம் உண்டாகிறது. இதற்கு இச்சா சக்தி என்று பெயர். இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள மனம் முயல்கிறது. இதுதான் கிரியாசக்தி விரும்பிய பொருளை அடைவதற்கான முறைகள் அல்லது உபாயங்களை மனம் கண்டுபிடிக்கிறது. இதுவே ஞானசக்தி, 'மனமானது தினந்தோறும் பிறக்கிறது' என்று சொல்வது பொருந்தாது. ஆனால் ஒவ்வொரு கணமும் பிறக்கிறது என்பதே சரியாகும். மனம் ஒரு குரங்குமட்டுமல்ல. நிறமாறும் பச்சோந்தியாகும். கணந்தோறும் பிறந்து, கணந்தோறும் உருமாறும். இங்குமங்கும் அலையும்.