பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தூய்மையான எண்ணங்கள். நல்ல எண்ணங்கள் எப்போதும் உறுதியானவைகளாக விளங்கும். 'கலங்காத்தன்மை' உடையவையாக இருக்கும். அதனால் எண்ணுபவரும் திண்ணியவராக இருப்பார். எண்ணியவாறே செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவராக இருப்பார். எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666) மனப்பண்பே செய்யுந் தொழிலை அறுதியிட்டுச் செயலாற்றி அதன் பலனை அடையும்படிச் செய்கிறது. ஒருவன் தாயை, உடன்பிறந்தானை, மனைவியைக் கட்டித் தழுவலாம். தழுவும்தொழில் ஒன்றாயினும் கருத்துக்கள் வெவ்வேறானவை. கருத்தையும் உணர்ச்சியையும் எப்போதும் விழிப்புடன் கவனித்து வரவேண்டும். மனத்தில் உருவாகும் கருத்துகளும் நாடோறும் நினைத்து வருகின்ற மனத்தோற்றங்களும் 'ஒருவன் யார்?' என்பதையும் 'ஒருவன் எவ்விதம் ஆக வேண்டும்?' என்பதையும் அறிவிக்கும். எனவே பெரியோர்கள் உயர்ந்த எண்ணத்தோடிருக்க வேண்டும் என்று காலந்தோறும் வலியுறுத்தி வருகின்றார். நல்ல எண்ணங்களும் நல்ல செய்கைகளும் அடிக்கடி மனத்தில் எழுந்தால் எழும்படிப் பழகியிருந்தால் அந்த எண்ணங்களும் செய்கைகளும் நிலைத்திருந்து நெடுநாட்களுக்குப் பயன்தந்துகொண்டிருக்கும். ஒரு கூடையில் நல்ல பழங்களும், கெட்ட பழங்களும் இருந்தால் நல்லவற்றை மட்டும் தெரிந்து எடுத்துக் கொள்கிறோம். கெட்ட பழங்களை ஒதுக்கி விடுகிறோம். மடியில் நல்ல பழங்களையே ஏந்திக்கொள்வதுபோல மனமும் நல்ல எண்ணங்களால் நிறைய வேண்டும். நல்ல எண்ணங்களால் முற்றிலும் நிரம்பிவிட்ட மனத்தில் தீய எண்ணங்கள் தங்க இடமில்லாமல் போய்விடும். கோட்டைச் சுவரில் கன்னம் வைத்து, கள்ள வாசல் வழியாகத் தலைநீட்டும் கள்வர்களையும் பகைவர்களையும், காவல் வீரன் வெட்டிச் சாய்ப்பது போல் மனத்தின் மேற்பரப்பில் நுழையும் தகாத எண்ணங்களை வெட்டித் தள்ளிவிடவேண்டும். எங்ஙனம் பழங்கள் விதையிலிருந்து உண்டாகின்றனவோ அவ்விதம் காரியங்கள் எண்ணங்களிலிருந்தே பிறக்கின்றன. நல்ல எண்ணங்களிலிருந்து நற்செய்கைகள் பிறக்கின்றன. கெட்ட