பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 மனம் தன்வசத்தில் இருக்குமானால் தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கும். அதில் உள் ஒளியான ஆன்மா வீற்றிருப்பதை உணரமுடியும். மிக மிக உயர்ந்த மனமும் மனிதனைப் போலவே அச்சாக இருக்கும். சமையல் பாத்திரங்களில் பிசுபிசுப்பும் களிம்பும் உண்டாகிப் பளபளப்பைக் கெடுத்துவிடும். அதுபோல உலக விவகாரங்களில் போக்குவரவு செய்யும் மனத்திலும், பாத்திரத்தில் களிம்புபோல மாசுபடியும். பாத்திரங்களை நாள்தோறும் சுத்தம் செய்வது பளிச்சென்று வைத்திருப்பது போல மனமும் அழுக்கு நீங்கிக் காந்தியுடன் பளிச்சென்று இருக்க வேண்டும். மனம் மாசுபட்டுள்ளதா என்பதை மிக எளிதாக அறிந்துகொள்ள முடியும். காலையில் துயில் எழுந்ததிலிருந்து அன்றாடப் பணிகளை முடித்து உறங்கும் வரை நாம் எண்ணியது, பேசியது. செய்தது ஆகியவற்றை அகத்தாய்வு செய்ய வேண்டும். ஒரு வணிகர் அன்றாடம் வரவு செலவுக் கணக்கினை ஆய்வது போல் மிகவும் அக்கறையுடன் அகத்தாய்வு அதாவது நமது 'ஒருநாள் வாழ்க்கையை' மிகவும் கண்டிப்புடன் தணிக்கை செய்ய வேண்டும். நடுநிலை பிறழாமல் தணிக்கை செய்துவரும் பழக்கம் படிந்துவிட்டால் மனம் மாசுபட்டுள்ளதா என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு ஆய்வு செய்யும்போது ஒவ்வொரு கட்டத்திலும் 'நம்மிடம்' நேர்மையிருந்ததா?" என்ற வினாவை எழுப்ப வேண்டும். விடை காணவேண்டும். ஆகவே 'நேர்மை' என்பது என்ன. அதன் பொருள் யாது என்று அறிவது மிகவும் அவசியமாகிறது. இரண்டு புள்ளிகளை இணைக்கின்ற நேர்கோட்டைப் போல ஒருவருடைய நலம் இன்னொரு வருடைய நலத்தையும் இணைக்குமானால் அதற்கு நேர்மை என்று பெயர். எனக்கு நலமாக இருப்பதெல்லாம் இன்னொருவருக்கும் நலமாக இருக்க வேண்டும். எனக்கு மட்டும் நலமாக இருந்து அஃது இன்னொருவருக்கு நலமாக இல்லையென்றால் அது குறையுடைய நலம். நேர்மையல்ல; அறமன்று. ஆக "இரண்டு புள்ளிகளை இணைக்கின்ற நேர்கோட்டைப்போல உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் இருக்கின்ற நலனையும், என்னுடைய நலனையும் ஒத்ததாக அமைக்கின்ற ஓர் இணைப்பு, ஒரு சூழ்நிலை. ஒரு சிந்தனைப்போக்கு இருக்குமானால் அதற்கு நேர்மை என்று பெயர்."