பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இவ்வாறு குன்றக்குடி அடிகளார் விளக்கம் தருகிறார். அந்த நேர்மை நம்மிடம் வந்துவிட்டதா? நம் வாழ்க்கையில் காணப்படுகிறதா? என்று அன்றாடம் ஆய்வு செய்து தெரிந்து கொள்ளவேண்டும். தன்னெஞ்சறிந்து. உணர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். நாள்தோறும் இவ்வாறு தணிக்கை செய்துவர நாம் நேர்மையாக இல்லை என்று உணர்ந்தாலும் நாளடைவில் நேர்மையை நெருங்கி விடுவோம். நேர்மையாளர் ஆகிவிடுவோம். தூய்மையாளர் ஆகிவிடுவோம். மனம் பளிங்கு போல் பளபளக்கும். மனமாசு நீங்கிவிட்டால் "உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்" ஆகிவிடும். மனம் முழுவதும் அன்பும், பண்பும் அறனும் ஆகிவிடும். அறம் குடியிருக்கும் இடத்தில் இறைவன், வள்ளல் பிரான் வந்து இருந்து அருள்புரிவார். இனி என்றும் ஆனந்தம், பேரானந்தம், நித்தியானந்தம். இவ்விதமாகச் சரீரத்தின் மூன்றாவது கோசமான மனோமயகோசம் தூய்மையாகி, அன்பால் நிரம்பி நித்தியானந்தத்தில் திளைத்திருக்கும் உன்னதபக்குவத்தை அடைய முயல்வதே இலக்காக வேண்டும். மனப்பயிற்சி ஆத்மசாதனம் பிரபஞ்ச வாழ்வில் யாண்டும் இன்பமும் துன்பமும் கலந்துள்ளன. சிற்றுயிர்கள் பேருயிர்களாகப் பரிணமிப்பதற்குத் துன்பம் தூண்டுகோல் ஆகிறது. சிற்றுயிர்கள் துன்பத்தை விரைவில் மறந்துவிடுகின்றன. ஆனால் மனிதன் போன்ற பேருயிர்கள் துன்பத்தை எளிதில் மறக்கமுடியாது. பட்ட துன்பத்தை எண்ணி எண்ணி மனம் கொதிக்கிறது. எவ்வளவுதான் சமாதானப்படுத்தினாலும், ஆறுதல் கூறினாலும் மனத்துக்குத் தேற்றம் உண்டாவதில்லை. மனிதனின் மனமானது சஞ்சலத்தில் மூழ்கியதாக யாண்டும் பரிணமித்து மேல்நிலைக்கு வரும்பொழுது இன்பத்தை நன்கு அனுபவிப்பது போன்றே துன்பத்திலும் ஆழ்ந்து உழல்கிறது. மானுட நிலையை அடைந்தபிறகு பலருக்கு இன்பத்தை விடத் துன்பமே அதிகமாக வருகிறது. துடைக்க முடியாத துன்பத்தில் வருந்தும்போது மனிதனுக்கு ஆராயும் மனப்பான்மை வருகிறது. விசாரித்துப் பார்க்கிற மனிதர்களில் பெரும்பாலோர் ஆத்ம சாதகர்களாக மாறி அமைகின்றனர். ஆத்ம சாதனத்தில் ஈடுபடுவது ஒன்றே துன்பத்தைத் துடைப்பதற்கு உற்ற உபாயம் என்று தெளிவடைகின்றனர்.