பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அறிவு என்னும் தத்துவம் ஒரு மனிதனின் உடனடியான தேவைகளை 'முதல் நிலை'த் தேவைகள் என்கிறோம். 'முதல்நிலை'த் தேவை என்பது உடலையும் அதனால் உயிரையும் பராமரிப்பது. வளமான உடம்பு அமைய நல்ல உணவு தேவை. வெப்பம், குளிர், தூசு தும்புகளிலிருந்து உடம்பினைப் பாதுகாப்பதற்குத் தட்ப வெப்ப நிலைக்கேற்ற உடை அவசியமாகிறது. அடுத்து உழைத்துக் களைத்த நிலையில் உறங்கி ஓய்வெடுக்க ஒரு வீடு தேவைப்படுகிறது. இது மனிதனின் முதல்நிலைத் தேவை. அன்பு, ஆற்றல், அறிவு, இன்பம், கடவுள் உணர்வு போன்றவை 'இரண்டாம் நிலை'த் தேவையில் அடங்குபவை. இவைகளில் அறிவு, அன்பு போன்ற சில பண்புகள் மனிதனிடம் மட்டுமே காணப்படுபவை. 'தாயன்பு' என்பது விலங்கு, பறவை போன்றவைகளிடம் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே உள்ள வெளிப்பாடுகளாகும். 'தாய்-பிள்ளை' என்ற பாசம் அவைகளிடம் நின்று நிலவுவதில்லை. மனிதன் இரண்டு வகையான தேவைகளை உடையவனாய் வாழ்கிறான். நான், நாம் என்ற உணர்வை உண்டாக்கக்கூடிய 'மனம்' தான் அதற்குக் காரணமாகிறது. உடம்பு, மனம், புத்தி, பிராணன், ஆன்மா ஆகியவற்றின் கலப்பே 'நாம்' என்ற உணர்வு, உயிர், மனம், பிராணன் மனத்திற்கு ஆதாரமாயுள்ள புத்தி ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவை ஆன்ம தத்துவத்தில் அடங்கும் அந்தக் கரணங்கள் என்று கூறுவர். புத்தியும் சித்தமும் அறிவின் பகுதிகளாகக் கொள்ளலாம். மனம், உடல் போல் வளர்வதில்லை. தேய்வதில்லை. மனம் சலிக்கும் தன்மையுடையது. கலங்கலும். தெளிதலும் மாசுபடுதலும், மாசு நீங்கி ஒளிர்வதும், மனத்தின் இயற்கையாகும். இத்தகைய மனம் அறிவால் நிரப்பப்பட்டிருக்கிறது. மனத்துள் அறிவு குடியிருக்கிறது. மனத்தின் தொடர்பு ஈடுபாடு இல்லாமல் எந்த அறிவையும் பெற இயலாது. உலகில் ஒரு மனிதன் பெற வேண்டிய அறிவு அனைத்தையும் 'எண்ணும் எழுத்தும்' என்று கூறுவர். ஈரடியில் உலகளந்த திருவள்ளுவர்,