பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு 63 (குறள் 342) என்கிறார். 'எழுத்து' என்பது பொது வகையான அறிவு. இது கற்றவர் கல்லாதவர் என யாவரிடமும் காணப்படும் அறிவு. கல்வியால், பொது வகையான கல்வியால் விரிவுபடுத்திக் கொள்ளக்கூடியது. 'எண்' என்பது வாழவைக்கும் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி போன்றவை. நந்தமிழ் நாட்டுப்புலவர் பெருமக்கள் எண்கல்வி மற்றும் எழுத்துக்கல்வி ஆகிய இரண்டையும் 'கலை' என்று கூறுவார். 'கம்பநாடன்' 'ஆய கலைகள் அறுபத்து நான்கும்' என்று கூறுகிறார். 'ஆய கலைகள் அறுபத்து நான்கும்' அறிவு என்பதில் அடங்கி, மனதில் உறைகின்றனவாகும். மனித உடம்பின் நான்காவது கோசம் விஞ்ஞானமயகோசம் அல்லது அறிவுமயமான அடுக்கு. நாள்தோறும் மனிதனை முன்னோக்கிப் பயணம் செய்ய வைப்பது அறிவே. அறிவின் பாங்குகளில் ஒன்று முன்னேறுவது. முயன்று முயன்று முன்னேறிக் கொண்டேயிருப்பது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த மனிதனும் நாமும் அதற்குக் கண்கண்ட சாட்சியாக நிற்கிறோம். மாந்தர் இனத்தை முன் எடுத்துச் செல்லும் அறிவைப் பற்றி இனி அறிவோம். நிலஉலகத்தில் ஆறறிவு படைத்த ஒரே ஒரு உயிரினம் மனிதன். பிரபஞ்ச உணர்வு உடையவன். பிரபஞ்சத்தில் மனிதனும் ஓர் அங்கம் எனினும் சாதாரண உணர்வில் மனிதன் 'நானும் உலகமும்' என்று எண்ணிப்பார்க்கக் கூடியவன். 'அகக்காட்சி"' உடையவன். மனிதனிடம் புறப்பார்வையும், அகப்பார்வையும் இருக்கின்றன. அகக்காட்சியும், புறக்காட்சியும் அடிப்படையாகின்றன. இந்த இரண்டில் எது அமையாவிட்டாலும் அறிவில் குறைபாடு ஏற்படும். அறிவு வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும். அறிவுக்கு இரண்டு கூறுகள் இருக்கின்றன. உணர்கூறு என்றும், செயற்கூறு என்றும் அவை இரண்டாகும். அறிவு 'தற்சுட்டு' உடையது அல்ல. ‘தான்அறிவு' என்ற உணர்வு அறிவிற்கு இல்லை. அறிவு 'புறச்சுட்டு' உடையது. அறிவு தன்னில் வேறானது. பிறரால் மட்டும் அறியப்படக்கூடியது. இத்தகைய அறிவு மனதின் விளக்கம் என்பதை உளங்கொள்வது மிகவும் அவசியமாகும். மனமின்றி மார்க்கமில்லை என்பதும் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதும் பொருள் செறிந்த பழமொழிகளாகும்.