பக்கம்:தமிழ்க் காதல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

தமிழ்க் காதல்


அதனை விழைந்து முடித்துப் பொதிந்து கொண்டாளாயின், அக்குற்றம் பொறுக்குந் தரத்ததோ? என்றெல்லாம் தாய் காரணத்தை அடுக்கி நினைத்து அடங்காச் சினங்கொண்டால், என்செய்வோம்? எனக் கற்பனைசெய்து கவல்கின்றாள் முல்லைக் குழலி, அவள் கவலை கிடக்க, அக்கவலை நமக்கு அறிவிப்பது என்ன? 'பெய்போது அறியாத் தன் கூழை என்ற தொடரின் கருத்து யாது? “மயிருக்கு மணந்தரும் பூ முடித்தல் வேண்டும் என்று அறியாதவள்” என்பது நச்சினார்க்கினியர் உரைவிளக்கம். பூ முடித்துப் பழக்கமில்லாதவள் என்பது இதன் கருத்து. "பெய்போது அறியா" என்பது அவருரை. இவ்வுரையைக் காட்டிலும் 'போதுபெய்தலை (குடுதலை) அறியாத' என்று உரைப்பதுவே பொருந்தும், "ஒஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை” (653) என்னும் குறள் நடையோடு பெய்போது என்ற நடையை ஒப்பிடுக. உரை எதுவாயினும் குமரிக்கொண்டை பூ மணம் அறியாதது என்பதுவே . பொருள். கூழைக் கூந்தல் கூந்தலைக் குறிக்கும் பலவகைச் சொற்களுள் கூழை என்பது ஒன்று. இச்சொல் ஒருபொருளின் இறுதி நிலையை, இறுதிப்பகுதியின் குறை நிலையைக் குறிக்கும். இளங்குமரியின் தலைமயிர் நீண்ட வளர்ச்சி பெற்றிருப்பதில்லை. இன்னும் வளர வேண்டும் குறையுடையது. ஆதலின் கூழைக் கிளவியைக் குமரியர் கூந்தலுக்கே ஆட்சிசெய்யும் இலக்கிய வழக்கைக் காண்கின்றோம். (குறுந் 13 நற். 140. அகம். 313 கலி. 107). முடித்தற்கு வேண்டும் கூந்தல் நீட்சி மனைவிப் பருவத்தே வளருமாதலின், பூ அணியும் வழக்கம் திருமணம் தொடங்கி மேற்கொள்ளப்படுவது எனக் கொள்ளலாம். குமரிப் பருவத்துக் கூழைக் கூந்தலைச் செவிலியர் எண்ணெய் தடவி வாரிப் பின்னி விடுமளவே செய்குவர். பின்னிய கூந்தலில் பூ அணிவதில்லை. பின்னுவிட் டிருளிய ஐம்பால் (கலி, 59) மண்ணி மாசற்ற நின்கூழை (கலி. 107) பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் (அகம். 108) கூந்தல் வாரி துசுப்பிவந் தோம்பிய நலம்புனை யுதவி (அகம். 195) இனைய பாடலடிகள் குமரியர் கூந்தலின் ஒப்பனையில் பூ இல்லாமைக்குச் சான்றுகளாம். கன்னியர் பூவணிதல் ஆகாது என்று தமிழ்ச் சமுதாயம் கொண்ட முறைக்குக் காரணம் என்ன? 1. கூழைமோனை"ஈறிலி கூழை, எனப்படும், 2. ஐங் 374, "முடியகம் புகாஅக் கூந்தலள்” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/150&oldid=1238460" இலிருந்து மீள்விக்கப்பட்டது