பக்கம்:தமிழ்க் காதல்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

289



9. உலோச்சனார்

இப்புலவர் பாடிய அகங்கள் 32. அவற்றுள் களவுப் பாலன 27, இவர்க்குச் சிறந்த அகக்கூற்று தோழியாவாள். அம்மூவனாரைப் போல உலோச்சனாரும் நெய்தல் நிலவியற்கையை நன்னர் அறிந்தவர், நெய்தற்றிணையில் குறிஞ்சிப் பொருள் பாடியவர்.

குறிஞ்சித்திணைக்கண் தலைவன் ஊசியனைய குன்றின் மேல் ஏறி இறங்குவான்; கையகல வழுக்குப்பாதையில் வருவான்; புலியும் யானையும் கரடியும் பாம்பும் வழியிடை அச்சுறுத்தும்; முதலையுடைய காட்டாற்றினை நீந்திக் கடப்பான்.இங்ங்னம் களவுக் கள்வனுக்கு மலைமுழுவதும் செவ்வையான தொடர்பு உண்டு. ஆதலின் குறிஞ்சியாவது மலையும் மலைசார்ந்த இடமும் என்று சொல்வது முழுப் பொருத்தமாகும். இப்பொருத்தம் முல்லை மருதம் பாலைகளுக்கும் உண்டு. நெய்தற்றிணையாவது கடலும் கடல்சார்ந்த இடமும் என்று வகுத்திருந்தாலும், பரந்த நீர்ப்பகுதி பாடல் பெற்றிலது. நெய்தற் செய்யுட்களைப் பார்ப்பின், கடல் சார்ந்த நிலப்பாங்கே சங்கத்தாராற் பாடுபெற்றமை அறியலாம். கடல் நிலத்தின்கண் மலைவழியிற். போலப் பல இடையூறுகள் இரா. தலைவன் தேரேறி வருங்கால் அவனது குதிரையின் கால்களைச் சுறாமீன்கள் தாக்கிப் புண்படுத்துகின்றன என்று சுறாவினைப் பகையாகக் கூறுவர் உலோச்சனார்.

அலர்ப் புலவர்

ஊரலர் இவர் பாடல் பலவற்றில் இடம்பெறுகின்றது.அன்னை மகளின் களவை யறிதற்கும், அவளைக் கடிதற்கும், சிறு கோலால் அலைத்து இற்செறித்தற்கும், தலைவனது தேர் இரவில் வந்து கொன்னே திரும்புதற்கும், உடன் போகுவதற்கும், தலைவனை வரைவு வற்புறுத்துவதற்கும், களவு முடிந்து கற்பாதற்கும் அலர் பயன்படும் திறங்களை இவர் களவுப் பாடல்களில் கற்கின்றோம். நெய்தல் நிலத்து வழியிடையூறுகள் பல இன்மையின், அதற்கு ஈடாக அலர் இடையூற்றை மிகுதியும் வைத்துக் காட்டுவர் புலவர் என அறிதல் வேண்டும். தலைவன் பிரிந்த காலத்து மனைவி யாதும் வருந்தாது ஆற்றியிருந்தாள்; இரங்காது குறித்த காலம் வரை திட்பத்தோடு பொறுத்திருந்தாள். இதனைக் கண்டும் ஊர்மாதுகள் அம்பல் செய்தனர். (குறுந் 175) என்று ஒரு புதுவகை அம்பலை புலப்படுத்துவர் உலோச்சனார். “கொடிது அறி பெண்டிர்” என்று ஊராரைப் பழிக்கின்றாள் தோழி. எனினும் அலரின் நலத்தை அறியாதவள் அல்லள். நம் களவு அகலத் துணைசெய்தது எனவும், இன்று புதிய நற்போக்கில் ஒழுகுகின்றது எனவும், ஊரைப் போற்றவும் செய்கிறாள் (அகம். 400) அலரின் செல்வாக்கைப் புனையும் இப்புலவர் அதன் மெய்ப்பாடுகளை நுணுக்கமாக நமக்குக் காட்டுவர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/302&oldid=1394741" இலிருந்து மீள்விக்கப்பட்டது