பக்கம்:தமிழ்க் காதல்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கல்வி

371


இயைந்த உள்ளவுறவும், சுருங்கக்கூற்றின் உயிர்மெய்ப் புணர்ச்சியே அதன் பாடுபொருளாம். ஆண்டாள் காதல் அகத்தினையாகாது, மெய்யுறல் இன்மையின். மாருத வேகன் சுதமதியைக் கூடியதும் அகத்திணையாகாது, உள்ளிசைவு இன்மையின் மெய்யாக நோக்கின் காதல் என்பதனுள் உடற் கலப்பும் அடங்கும். உடற்கலவியின்றிக் காதற்றன்மை செவ்வுறாது. பாலுறவுதான் காதல் என்னும் தகுதிக்கு உரியது. காதல் என்ற பெயர் மேலிட்டுப் பிறவாறு சொல்லுவன வெல்லாம் அரைகுறையான உருவகமாவன” என்பர் ஆசுவால் சார்ச்சு.[1]

காதற் காமம் காமத்துச் சிறந்தது

விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி (பரி. 9)

என்று இரு சொற்களையும் இயைத்தார் குன்றம் பூதனார். பொதுவான மொழி வழக்கில் காதல் என்பது உள்ளப் பற்றையும், காமம் உடற்பற்றையும் குறிக்கும் என முன்னர்க் கண்டோம். இருசொல்லின் பொருளையும் ஒருங்கு காட்டும் ஒரு தமிழ்ச் சொல் உண்டா? உண்டு. அதுவே அகம் என்னும் சொல். எனினும் முன்னிலைப் படுத்திக் கூறும் நான்மறையாளர்க்கு விளங்கவேண்டி, குன்றம் பூதனார் "காதற்காமம்’[2] என்ற ஒரு புதுத் தொடரை ஆக்கின்ார். ஆக்கி, "விருப்பு ஒரொத்து மெய்யுறு புணர்ச்சி” எனப் பொருளும் நிரல்பட விரித்துக் காட்டினார். இக் காதற்காமந்தான் அகத்திணை. அகத்திணைத் தலைமக்கள் உள்ளங்கடிடிய உடற்கூட்டாளிகள். உடல் மட்டும் கலந்ததா, உள்ளம் மட்டும் கலந்ததா? என்ற வினாவிற்கு இவர்பால் இடமில்லை. ஆதலின் அகப்பாட்டின் கண் காதல் என்ற சொல் வருமிடத்துக் காமப் பொருளும் உண்டெனக் கொள்க; காமச்சொல் வந்த இட்த்துக் காதற் பொருளும் உண்டெனக் கொள்க.

உள்ளப் புணர்ச்சி

காதலர்தம் உள்ளப்புணர்ச்சியை அகப்பாட்டு விரித்துரைப்பது இல்லை. அதனை விரித்து மொழிய என்ன இடனுண்டு? “பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் கர்ண்ப" என்று உள்ள ஒற்றுமையின் இயல்புக் கிடப்பைக் கூறுவர் தொல்காப்பியர். களவுத் தலைவனைத் தோழி பன்முறை வரைவு கடாவும் போதும், அவன் வரைவு நீட்டிக்கும் போதும், அவனது உள்ளத்தில் மாறுபாடு உண்டோ என்று ஐயுறுதல் கூடாது. வேற்றுமணஞ் செய்து கொள்வான் என்ற கருத்தை உள்வைத்துத் தோழி வரைவுமுடுக்கல் இல்லை. அந்நோக்கம் வைத்து அவன் நாட்கடத்தலும் இலன். திருமணத்திற்குப்பின் தலைவன் வேற்று நாட்டைப் பலதிங்கள் பிரிந்திருந்தபோதும், உள்ளூரின்கண் பரத்தையிற் பிரிந்த போதும்


  1. The Psychology of Sex. p. 105.
  2. காதலங் காமம், பரி. 6 அன்புறு காமம், நற்.389
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/384&oldid=1394898" இலிருந்து மீள்விக்கப்பட்டது