பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தமிழ் நாடும் மொழியும்


முதற் குலோத்துங்கன் காலம் வரையிலும் பாண்டியர் காடுமேடுகளிற் கரந்தே உயிர் வாழ்ந்துவந்தனர். குலோத்துங்க சோழன் தென் கலிங்க நாட்டை வெல்லப் பராந்தக பாண்டியன் உதவினான். முதற்குலோத்துங்கனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் வலிமை குன்றியவராக விளங்கினர். எனவே பாண்டியர்கள் மறுபடியும் ஓயாது கிளர்ச்சிசெய்து தங்கள் நாட்டைப் பெற்றனர். ஆனால் தீ ஊழினால் பாண்டியர்களுக்குள்ளேயே அரசுரிமை பற்றி உள்நாட்டுப் போர் மூண்டது. குலசேகர பாண்டியனும், பராக்கிரம பாண்டியனும் அரசுரிமை பற்றிப் போரிட்டனர். குலசேகரனைச் சோழரும், பராக்கிரம பாண்டியனைச் சிங்களவரும் ஆதரித்தனர். சிங்களப்படை வருமுன்பே குலசேகரன் சோழர் உதவியுடன் மதுரையைக் கைப்பற்றி, பராக்கிரமனைக் கொன்றுவிட்டான். ஆனால் சிங்களவர் தலைவனான இலங்காபுரன் வந்து குலசேகரனை முறியடித்து, பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனைப் பாண்டிய நாட்டு அரசனாக்கினான். இலங்காபுரன் ஈழஞ்சென்ற சமயம் பார்த்துச் சோழர்கள் வீரபாண்டியனை நாட்டைவிட்டு ஓட்டி, மீண்டும் குலசேகரனை அரசனாக்கினர். இவனுக்குப் பின்னர் பட்டமேறிய இவன் மகனான விக்கிரமபாண்டியனுக்கும் சோழர் பக்கபலமாக இருந்து உதவினர். கி. பி. 1186-இல் மூன்றாங் குலோத்துங்கனால் வீரபாண்டியன் அடியோடு முறியடிக்கப்பட்டான்.

சடாவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றதும் பாண்டியர்கள் முழு உரிமையுடன் விளங்கலானார்கள். அதன்பின் வந்த பல பாண்டிய மன்னர்கள் பேரரசர்களாக விளங்கினர். பாண்டியர் வரலாற்றுக்குப் பெருந்துணை புரியவல்ல கல்வெட்டுக்கள் பல 13-ம் நூற்றாண்டில் வெட்டப்பட்டன.

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சடாவர்மனுக்குப் பின்னர் கி. பி. 1216-இல் பட்டம் பெற்றான். இவன்