பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

225


மடம் அளித்த அருட்கொடையாவர். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், சம்பந்தசரணாலய முனிவர், சீர்காழிச் சிதம்பரநாத முனிவர் முதலியவர்கள் தருமபுர மடத்தின் நல்லாதரவினால் தமிழ்த் தொண்டு புரிந்து வந்தனர். இப்புலவர்களேயன்றி மடங்களில் தலைவர்களாக இருந்தவர்களும் தமிழ் கற்றுப் புலமை பெற்றுத் தமிழ் நூல்கள் சில யாத்தும், மடத்து மாணாக்கர்களுக்குத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைக் கற்பித்தும் தமிழ்த் தொண்டு புரிந்துவந்தனர்.

தசகாரியம், சிவாக்கிரமத் தெளிவு, சித்தாந்தப் பஃறொடை , சித்தாந்த சிகாமணி, நமச்சிவாய மாலை, நிட்டை விளக்கம் முதலிய பத்து நூல்களைத் திருவாவடு துறை மடத்துத் தலைவராக விளங்கிய அம்பலவாண தேசிகர் இயற்றினார். சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்தி நிச்சயம், சிவானந்த போதம், பிரசாதக் கட்டளை முதலிய நூல்கள் தருமபுர ஆதீனத்தின் ஆதரவால் வெளிவந்தவையாகும்.

தமிழ்ச் சங்கங்கள்

நான்காம் தமிழ்ச் சங்கம்

பண்டு, பைந்தமிழ் நாட்டில் முச்சங்கங்கள் முத்தமிழையும் வளர்த்தன என்று முன்னர்க் கண்டோம். மூன்றாம் தமிழ்ச் சங்கம் அழிந்த பின்னர், மதுரையில் பன்னூறாண்டுகளாக வேறொரு தமிழ்ச் சங்கம் தோன்றவில்லை. இக்குறையினை முதன் முதலில் நீக்கக் கருதியவர் இராமநாதபுரம் சேது மன்னர்களுடைய வழியில் வந்த பாண்டித்துரையவர்களாவார். இவர் கி. பி. 1901இல்