பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தமிழ் நாடும் மொழியும்


என நிலங்கள் அளந்து சொல்லப்பட்டன. உழக்கு, உரி, நாழி, பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குருணி, காடி, கலம் என்னும் முகத்தலளவைகளும், நாலுசாண் கோல், பன்னிரு சாண் கோல், பதினாறு சாண் கோல் முதலிய நீட்டலளவைகளும் பல்லவர் காலத்தில் வழக்கத்திலிருந்தன.

காஞ்சி, கடிகாசலம், பாகூர் இவ்விடங்களில் விளங்கிய கல்லூரிகள் பல்லவர் ஆட்சியில் சிறந்த கல்விக் களஞ்சியங்களாய் விளங்கின. ஆனால் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த பல்லவர் தலை நகராகிய காஞ்சிமாநகர் தொன்றுதொட்டே கல்விக்கு இருப்பிடமாகவும், கற்றோர்க்கு உறைவிடமாகவும் விளங்கியது. இதன் காரணமாகவே அப்பர் பெருமான் 'கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்' என்றும், அவந்திசுந்தரி கதாசாரம் என்னும் நூலாசிரியர் 'கற்றவர் கூட்டம் இருக்கும் இடம் காஞ்சி' என்றும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அறநெறி ஓம்பிய அறவணவடிகள் இருந்து அருளுபதேசம் செய்த இடம் இக்காஞ்சியே. மேலும் மணிமேகலை சமயக் கணக்கர் பலரைச் சந்தித்த இடமும் இதுவே. இங்கு பல பௌத்தக் கோவில்கள், மடங்கள் இருந்தன. பல்லவர் ஆட்சி சிறப்புற்றிருந்த காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் காஞ்சியிலிருந்துகொண்டு தமிழ் வளர்த்தனர். வேலூர்ப்பாளையம், காசக்குடி கல்வெட்டுக்கள் கடிகை என்னும் வடமொழிக் கல்லூரி ஒன்று காஞ்சியில் இருந்தது என்றும், இராசசிம்ம பல்லவனால் அக்கல்லூரி புதுப்பிக்கப்பட்டது என்றும், அங்கு வேதம், வியாகரணம், மீமாம்சை என்பன கற்றுக் கொடுக்கப்பட்டன என்றும் கூறுகின்றன.

காஞ்சிக்கல்லூரியில் கடம்ப வல்லரசை நிறுவிய மயூரசர்மனும், நாளந்தாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தர்மபாலரும் கலைகள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தனர் எனவும் அறிகின்றோம். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தென்னகம் வந்து சென்ற