பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

13


சம்பரணை வென்றவன் தசரதன். ஈழத்தை வென்றவன் இராமன். இலங்காபுரி வேந்தன் இராவணன். இவ்வாறு புராணக் கதைகளிலிருந்து தங்கள் குலமுதல்வர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். ‘பத்திரகாளி வரபுத்திரன்’, ‘சப்தகன்னி புத்திரன்’ என்பது வலங்கையர் சரிதம் என்னும் நாட்டுப் பாடலில் காணப்படும் செய்தி. சப்த கன்னியர்களுக்கு சத்தி முனியின் ரிஷிகர்ப்பமாகப் பிறந்தவர்கள் வலங்கையர். அவர்களை வளர்த்துக் கல்வி கற்பித்தவள் பத்திரகாளி. இனித் தாங்கள் அரச பரம்பரையினர் என்று சொல்லிக் கொள்வதற்காகப் ‘பரம்பரைப் பாண்டிய நாடன்’ என்றும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்கள்.

தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் பரதவர்களின் உயர்வைப் பாடும் நூலொன்று 1909இல் வெளியாயிற்று. அதன் தலைப்பு ‘பரவர் புராணம்’.12 எழுதியவர் கத்தோலிக்கர் ஆயினும் இந்துப் புராணக் கதைகளை ஒப்புக்கொண்டு தங்கள் சாதியாருக்கு அரசவம்சத்தில் உயர்ந்த பதவியைப் பெறப் புதுக்கதைகளை இந்நூல் படைக்கிறது. இந்நாட்டிற்கு இந்துமதம் வந்த வரலாற்றைக் கூறிச் சாதியைப் பிராமணர்கள் ஏற்படுத்தியதாகவும் கூறுகிறது. பின்னர் ஆரியகுல, சந்திரகுல மன்னவர் வரலாற்றைப் புராணம் கூறும் முறையிலேயே சொல்லி வந்து சந்திரன், புதன், புருரூவன், அவனுக்கு ஊர்வசியின் வயிற்றில் பிறந்தவன் ஆயு, நகுஷன், யயாதி என்று தந்தை மகன் வரிசையில் சந்திரகுல மன்னர் பரம்பரை வரலாற்றை இந்நூல் கூறுகிறது. யயாதிக்குப் பல மனைவியரிருந்தனர். அவர்களுள் ஒருத்தி பார்ப்பனியான தேவயானை. அவளுடைய மக்களிருவர் தந்தை சொல்லை மீறியதால் சாபமடைந்து வேடராயினர். அசுரப் பெண்ணான சன்மிஷ்டையின் மக்கள் தந்தையின் கோபத்துக்காளாகிச் சாபம் பெற்றுக் கள் விற்கப் போயினர். இவனுக்கிளையவன், அண்ணனைப் போலவே சாபம் பெற்று மீன் பிடிக்கப் போனான். இவர்களே பரதவர்கள். ஆண் வழியில் இவர்கள் குலத்தவனே பிற்காலத்தில் பாரதம் முழுவதையும் ஆண்ட பரதன் என்று இந்நூல் கூறும்.

சந்திர வம்சத்தில் தோன்றிய அர்ச்சுணன், பரதகுல மன்னன் மகள் சித்திராங்கதையை மணந்து, பாண்டிய வம்சம் தோன்றிற்று.

இவ்வாறு பண்டைக்கால இதிகாச மன்னர்களோடு தங்களைத் தொடர்புபடுத்திக்கொண்டு ஒரு புதிய புராணத்தை இந்நூலாசிரியர் இயற்றினார்.