பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 13 பிற இன்பங்களிடையே பாடலின்பம்: வேறு சில இன்பங்களைப் போல் பாடல் இன்பத்துக்கு இடம், காலம், வயது முதலியவைத் தொடர்பாகப் பாகுபாடு கிடையாது. பாடல் இன்பத்தைக் கோயிலிலும் நுகரலாம்மருத்துவ மனையிலும் நுகரலாம். பாடல் இன்பத்தைக் காலை - மதியம் - மாலை-இரவு-மழை-பனி-குளிர் - வெய்யில் முதலிய எந்த வேளையிலும் துகரலாம். சிறுவர், முதியவர், ஏழை, செல்வர், கற்றார், கல்லாதவர், ஆடவர், மகளிர்முதலிய எவரும் நுகரலாம்-எவர் முன்பும் நுகரலாம். எவருட னும் கலந்து நுகரலாம். மற்ற இன்பங்கட்கெல்லாம் இவ்வளவு வாய்ப்பு உண்டா?-இத்தனை வாய்ப்பு உண்டா? மற்றும், 'பாடலின்பம் நிலைத்தது நோய் தராதது பொருட் செலவு இல்லாதது, ஒரு முறை பெற்றுவிட்டால், அந்தப் பாடல், உள்ளத்தில் ஊறுகாய் போல் ஊறி எப்பொழு தும் எண்ணியும் பாடியும் மகிழச் செய்யும். வேறு பொருள் களை விலைகொடுத்துத் திரும்பத்திரும்ப வாங்குவது போல ஒருமுறை பெற்ற பாடலைத் திரும்பத் திரும்ப விலைகொடுத்து வாங்கவேண்டுமா என்ன? மேலும், பாடலின்பம் எத்தனை முறை சுவைத்தாலும் தெவிட்டாது - எவ்வளவு நேரம் நுகர்ந்தாலும் சலிப்புத் தட்டாது, நுகர நுகரச் சுவை பெருகும்: ஈடுபட ஈடுபட இன்பம் கொழிக்கும். ஈண்டு, நவில் தொறும் நூல் நயம் போலும் என்னும் திருக்குறள் (783) பகுதியும், தேருந் தொறும் இனிதாந் தமிழ் என்னும் தஞ்சைவாணன் கோவைப் (59)பாடற் பகுதியும், மங்கையொருத்தி தருஞ் சுகமும் எங்கள் மாதமிழுக்கு ஈடில்லை, என்னும் பாரதிதாசன் பாடற் பகுதியும் ஒப்பு நோக்கி மகிழத்தக்கன. இந்தப்பகுதி களில் தமிழ்' என்றிருப்பினும், மற்ற மொழியாளர்கள் தத்தம் தாய்மொழிப் பாடல்களை ஈண்டு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.