பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

23



அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?

(அடுக்குகிற வருத்தம், உடைக்கிற பூனைக்கு.)

அடுத்தகத்துக்காரிக்குப் பிள்ளை பிறந்ததென்று உலக்கையை எடுத்து இடித்துக்கொண்டாளாம்.

அடுத்தகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி; அல்லித் தண்டுபோல் குளிர்ந்திருக்கும்.

அடுத்த கூரை வேகிறபோது தன் கூரைக்கும் மோசம்.

அடுத்ததன் தன்மை ஆன்மா ஆகும். 425

அடுத்தவரை அகல விடலாகாது.

அடுத்தவரைக் கெடுக்கலாகாது.

அடுத்தவளுக்கு அகமுடையான் வந்தது போல.

அடுத்தவன் தலையில் நரை என்பானேன்? அவன் அதைச் சிரை என்பானேன்?

அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான். 430

(கெடுப்பான்.)

அடுத்தவனை ஒரு போதும் கெடுக்கலாகாது.

அடுத்தவனைக் கெடுக்கலாமா?

அடுத்த வீட்டில் மொச்சை வேகிறதென்று அடிவயிறு பிய்த்துக் கொண்டு போகிறது.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்கு இரைச்சல் லாபம்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரைலாயம். 435

(உத்தியோகம் வந்தால்.)

அடுத்த வீட்டுக்காரனுக்கு மணியம் போகிறது; ஒன்றாகக் காது அறுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அம்மிக்குழவி எடுத்துக் குத்திக் கொண்டாளாம்.

(இடித்துக் கொண்டாளாம்.)

அடுத்தாரைக் கெடுக்கிறதா?

அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடுகிறான்.

அடுத்தாரைக் கோபித்தால் கெடுத்தாலும் கெடுப்பார். 440

அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.

(எடுத்த காரியம், கொடுத்த உதவியும் முடியும்.)