பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தமிழ்ப் பழமொழிகள்


குணம் பாதி; கொண்ட நோவு பாதி.

குணம் பெரிதே அன்றிக் குலம் பெரிதல்ல.

குணம் போல வாழ்வு. 8660


குத்தக் கூலியும் கொடுத்து எதிர் மூச்சும் போட்டானாம்.

(போடுகிறது.)

குத்தாக் குறும்பி, குடுமி இல்லாப் பத்தங்கி.

(குறும்பி, பத்தங்கி என வைணவர்களில் இரு வம்சம். குறும்பியர் உபநயனத்தில் காது குத்துவர்; பத்தங்கி சாமகர் மொட்டையடிப்பர்.)

குத்தாத காதுக்கு ஊனம் இல்லை; குரைக்காத நாய்க்கு உதையும் இல்லை.

குத்திக் கெட்டது பல்; குடைந்து கெட்டது காது.

குத்திக் கொண்டு வா என்றால் வெட்டிக் கொண்டு வருகிறான். 8665


குத்திரம் குடியைக் கெடுக்கும்.

குத்தி வடித்தாலும் சம்பா, குப்பையிலே போட்டாலும் தங்கம்.

(மாணிக்கம்.)

குத்தி விட்டு வேடிக்கை பார்க்கிறது.

குத்தின அரிசி கொழியலோடு இருக்க, இந்தாடா மாமா என் தாலி என்றாளாம்.

குத்துக்கு முன்னே குடுமியைப் பிடி. 8670


குத்துகிற உரல் பஞ்சம் அறியுமா?

குத்துப் பட்டவனும் துாங்க மாட்டான். குறை வயிற்றுக்காரனும் தூங்க மாட்டான்.

குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறை வயிறு பொறுக்காது.

(பொறுக்குமா?)

குதிக்கும் முன் பார்த்துக் குதி.

குதி குதி என்பார்கள் எல்லாரும் கூடக் குதிப்பார்களா? 8675


குதித்துக் குதித்து மா இடித்தாலும் குண்டனுக்கு ஒரு கொழுக்கட்டை.

குதித்துக் குதித்து மா இடித்தாலும் குந்தாணிக்கு ஒரு கொழுக்கட்டையும் கிடையாது.

குதித்துக் குதித்து மா இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டையே.