பக்கம்:தமிழ்மாலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தில் 13 அடியார்களை வேளாளர் என்னும் சொல்லால் உயர்த்திப் பாடினார். ஆனால் வாயிலார் புராணத்தில், “தொண்மை நீடிய சூத்திரத் தொல்குலம்’ என்றும், இளையான்குடிமாற நாயனார் புராணத்தில், “வாய்மையில் நீடு சூத்திரதற்குலம்" என்றும் வேளாளரைச் “சூத்திரர் என்னும் சொல்லால் வைத்திருப்பதை மறுத்து வேளாளர் என்னும் சொல் இருந்த இடங்களில் சூத்திரர் என்னும் சொல்லைச் செருகிவிட்டனர்" என்று இத்தொடர்கள் அமைந்த முறையைச் சான்றுகளுடன் நிலைநாட்டியுள்ளார்.

எழுத்தில் பேச்சில் மட்டுமன்றிச் செயலிலும் அடிகளார் சாதி உயர்வு தாழ்வு பார்த்தவரல்லர். அவர் தோற்றமே கலப்புக் குலங்களால்தான். தம் இல்லத்திலும் சாதி பார்க்காது திருமணம் செய்வித்தார். கைம்பெண் திருமணம், மகளிர் மறுமணங்களை வரவேற்றார்.

அடிகள் காந்தியண்ணல் சபர்மதியில் ஆசிரமத்தை நிகழ்த்தியபோது திரு தாதாபாய், அவர் மனைவி திருமதி தாலிபென், மகள் இலட்சுமி ஆகியோரைக் கொண்ட தீண்டத்தகாத குடும்பம் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு. பணஉதவிகள் நின்றன. மறு திங்களுக்குச் செலவிற்குப் பணமே இல்லை என்றநிலை. அந்நிலையிலும் அக்குடும்பத்தை வைத்துக்கொண்டே தம் சாதி ஒழிப்புத் தொண்டை உறுதியாகக் கொண்டார் அண்ணலார்.

அண்ணல் போன்றே அடிகளாரும் தம் இல்லில் புலவர் முனுசாமி, திரு பாலகுருசிவம், தருமலிங்கம் என்பாரின் குடும்பம் முதலியோரைத் தம் இல்லத்தில் வைத்துப் போற்றித் தம் சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அடிகளார்.

இவர் பேச்சையும் எழுத்தையும் செயற்பாட்டையும் ஒன்றுகூட்டி நோக்கினால் பேராசிரியர் முனைவர் மு. வரதராசனார் பாடிய,"சாதி பேயைச் சாடிய வீரன்"என்பதும்,

"சைவ சமயம் சாதியைக் கடந்ததென் றையந் தீர அறிவுறுத் திட்டோன்' என்பதும் உண்மைப்பொருளின் எழுத்துருவங்கள் எனலாம். இவற்றை உணர்ந்த கவியோகிசுத்தானந்தபாரதியார்,

“மறைமலை யென்னில் சாதி -

மறைந்தொரு குலமே தோன்றும் ” என்று பாடியது அடிகளாரைப் பற்றிய மாணிக்கக் கல்வெட்டாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/48&oldid=687108" இலிருந்து மீள்விக்கப்பட்டது