பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


கி. பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இசுலாம் பரவத் தொடங்கியது, கி. பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர அடிகள் தம் செய்யுட்களில் 'சலாம்', 'சொக்காய்' என்னும் இந்துஸ்தானிச் சொற்களைப் பயன்படுத்தினார். இதனை நோக்க, வடமொழியாளர் தமிழகத்தில் தங்கித் தமிழரோடு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் பழகிய பின்புதான் அவர்தம் சொற்கள் தமிழில் இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதுதல் தவறாகாது. இதனை நோக்கத் தொல்காப்பியர் ஏறத்தாழக் கி. மு. 4ஆம் நூற்றாண்டினர் எனக் கொள்ளலாம்.

சந்திரகுப்தன் (கி. மு. 322-2.98) காலத்துச் சமண சமய குரவரான பத்திரபாகு முனிவரின் மாணவரான விசாக முனிவர் தமிழ்நாட்டில் சமண சமயப் பிரசாரம் செய்தார் என்பது சமண நூல் செய்தி. மதுரை மாவட்டத்திற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் சமணரால் வெட்டப்பெற்றவைஅவற்றின் காலம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு என்பது கல்வெட்டறிஞர் கருத்து. எனவே, சமணம் கி. மு. 3ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் நுழைந்து பரவத் தொடங்கியதெனலாம்.7 சமணம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை.8

அசோகன் தனது இரண்டாம் பாறைக் கல்வெட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மனிதர்க்கும் விலங்குகட்கும் மருத்துவ வசதி அளிக்க வசதி செய்ததாகக் கூறியுளளான்; 13ஆம் பாறைக் கல்வெட்டில் தமிழகத்தில் பெளத்த தருமம் பரவ ஏற்பாடு செய்தமையைக் குறிப்பிட்டுள்ளான். இவற்றால் அசோகன் காலத்திற்றான் (கி. மு. 278-232)

7. மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக். 34-36. -

8. M. Srinivasa Ayyangar, Tamil Studies, p. 8; T. R. Sesha Ayyangar, Ancient Dravldians, p. 109.