பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கிறது. நல்லந்துவனார் நெய்தற்றிணையில் ஒரு செய்யுளும் செய்திலர். அவர் நெய்தற்கலியைப் பாடியதாக வெண்பா விளம்புகிறது.1

(2) முல்லைக் கலியில் கூறப்படும் முல்லை நில மக்கள் பாண்டிய நாட்டவராகக் காணப்படுகின்றனர். அவர்கள் பாண்டியனை வாழ்த்துவதாகச் செய்யுள் கூறுகிறது. சோழ வேந்தன் தனது நாட்டு முல்லை நில மக்களைப் பாடாதது வியப்பே அன்றோ? சோழ அரசன் தனது நாட்டு மக்களைப் பற்றிப் பாடாமல், பாண்டிய நாட்டு முல்லை நில மக்களைப் பற்றி மட்டும் தனது முல்லைக் கலியில் பாடினான் என்னல் சற்றும் பொருந்தாது. முல்லை நிலம் பாண்டியர்க்கே உரிமை யுடையதும் அன்று. பாண்டியனை வாழ்த்திப் பரவும் ஒரு குறிப்பிட்ட முல்லை நிலத்தாரைப் பற்றிச் சோழ வேந்தன் நூல் பாடினான் என்பது அறிவிற்கும் அநுபவத்திற்கும் சற்றும் பொருந்தாததாகும்.

(3) நெய்தற் கலியைப் பற்றி ஒரு சிறு செய்யுளும் ஏனைய தொகை நூல்களுட் பாடியிராத ஒருவர், நெய்தற் கலியைப் பாடினார் என்பது, கருக்கொள்ளாது மகப்பேறு தோன்றினாற் போலாகும் அன்றோ?

(4) கலித்தொகை முழுமையையும் நன்கு ஆராயின், செய்யுட்கள் ஒரே ஆசிரியர் இயற்றியன என்பது புலனாம். இதனை ஒப்புக்கொள்ள மனமற்றவர் இவ்வெண்பாவினை வெளிக்கிளம்ப விட்டனர். இவ்வெண்யா எந்தக் கலித் தொகை ஏட்டிலும் இல்லை; வேறு நூல் ஏட்டுப் படிகளிலும் இல்லை; மாயமாய் வந்ததாகும். இதனை நன்கு எண்ணாது புலவர்கள் கலித்தொகையை ஐவர் பாடியதாகக் கொண்டு விட்டனர்.2 இது முற்றும் ஆதாரமற்ற-இக்காலப் புலவர்

1. K.N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, p. 35.

2. lbid. p. 225.