பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அக்காலத்தில் ஒய்வின்றி விழாக்கள் நடை பெற்றமையையும் இவ்வரிகள் புலப்படுத்துகின்றன. எனவே, திருப்பரங் குன்றத்தில் முருகன் கோவில் சங்ககாலத்திலேயே இருந்தது என்பது தெளிவாதல் காண்க.

தென்னவற் பெயரிய துன்னரும் துப்பிற்

றொன்முது கடவுள்
'”

எனவரும் மதுரைக்காஞ்சி அடிகட்கு (வரி. 40-41)

'இராவணனைத் தமிழ் நாட்டை யாளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழைமை முதிர்ந்த அகத்தியன்’ ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார். இந்நச்சினார்க்கினியரே தொல்காப்பியப் பாயிரவுரையில், 'அகத்தியர் பொதியின்கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, ' என்று கூறியுள்ளார்.

மேலே கூறப்பெற்ற மதுரைக்காஞ்சி அடிகளுக்கு நச்சினார்க்கினியர் உரையைத் தந்த பத்துப்பட்டின் பதிப் பாசிரியராகிய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அடிக்குறிப்பில், தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியமலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினர் என்பது பண்டை வரலாறு' என்று கூறி, அகத்தியர் இசையில் வல்லுநர் என்பதற்கும், அகத்தியர் யாழ் வாசித்துப் பொதியினை உருகச் செய்தனர் என்பதற்கும், இராவணனை இசைபாடி அடக்கினர் என்பதற்கும் திருக்கயிலாய ஞானவுலா, தக்கயாகப் பரணி, சோணசயில மாலை, வெங்கையுலா, தஞ்சைவாணன் கோவை என்னும் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர். இவை மதுரைக்காஞ்சிக்கு மிகப் பிற்பட்ட நூல்களாயினும், அகத்தியர் இசைபாடி இராவணனை விரட்டினார் என்ற வரலாறு இந்நாட்டில் நெடுக வழங்கிவந்தது என்னும் உண்மையை உணர்த்துகின்றன அல்லவா? எனவே அகத்