பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

27


எழுத்து வளர்ச்சி

பேச்சுமொழிக்குப் பன்னெடுங்காலம் பின்னரே எழுத்து மொழி தோன்றியது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. முதலில் பேசத்தொடங்கிய மக்கள் முழுக்கருத்து அமைந்த வாக்கியங்களை ஒலித்தாற் போலவே, அவற்றைக் குறிக்க ஓவியங்களை எழுதினர். இங்ஙனம் தீட்டப் பெற்றவை ஓவிய எழுத்துகள் (Ideographs) எனப்படும். ஓவிய எழுத்துத் தமிழில் ‘உருவெழுத்து’ எனப்படும்

“காணப் பட்ட உருவம் எல்லாம்
மாணக் காட்டும் வகைமை நாடி
வழுவில் ஓவியன் கைவினை போல
எழுதப் படுவது உருவெழுத் தாகும்”[1]

முதலில் கண் என்னும் உறுப்பைக் குறிக்க ஓவியம் தீட்டப்பட்டது. மனிதன் அறிவு வளர வளரப் பார்த்தல், பார்வை முதலிய கருத்துகளை உணர்த்தக் கண்ணைக் குறிக்கும் ஓவியத்தால் முடியவில்லை. இவற்றைக் குறிக்கப் புதிய ஓவியங்கள் தேவைப்பட்டன. பின்பு திணை, பால், எண், இடம் ஆகிய பாகுபாடுகளையும் காலவேறுபாடு முதலியவற்றையும் உணர்த்த ஓவிய எழுத்துகள் ஓரளவு பயன்பட்டன. கருத்தும் கற்பனையும் வளர வளர, எல்லா வற்றையும் உணர்த்த ஓவியங்களால் முடியவில்லை. எனவே, ஓவியங்களாக இருந்தவை நாளடைவில் அடையான எழுத்துகளாக (Hieroglyphs) மாறத் தொடங்கின, இங்ஙனம் மாறத்தொடங்கிய, அடையாள எழுத்துகள் பிற்காலத்தில் ஒலி எழுத்துகளாக மாறின.

ஒவ்வோர் எழுத்தும் முதலில் ஓவியமாக எழுதப்பட்டுப் பொருளை நேரே உணர்த்தியது; பிறகு அந்தப் பொருளின் பெயராகிய ஒலியை உணர்த்தியது; அதன் பின்பு ஓர் அசையை உணர்த்தியது; இறுதியில் ஓர் உயிரெழுத்தை

  1. யாப்பருங்கல விருத்தி, நூற்பா 96, உரை