பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

321


திணை பற்றிப் பாடுவதில் கபிலர் வல்லவர் என்பதற்கு இக்குறிஞ்சிப் பாட்டு ஏற்ற சான்றாகும்.

9. பட்டினப்பாலை : பட்டினம் என்பது, சோழர் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்தைக் குறிக்கின்றது. பாலை என்பது, தலைவன் தலைவியை விட்டுப் பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாகும். எனவே, பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைப் பாடல் 'பட்டினப் பாலை' எனப்பெயர் பெற்றது. தலைவியை விட்டுப் பிரிந்து பொருள் ஈட்டுவதற்கு வேற்று நாட்டுக்குச் செல்ல விரும்பிய தலைவன். 'புகழ் மிக்க காவிரிப்பூம்பட்டினத்தைப் பெறுவதாயினும் என் மனைவியைப் பிரிந்து வாரேன்; கரிகால் வளவன் பகைவர்மீது செலுத்திய வேலினும் கொடியது யான் கடக்க விரும்பும் கானம்; என் மனைவியின் தோள் அச்சோழனது செங்கோலினும் குளிர்ச்சியுடையது', என்று கூறிச் செலவு தவிர்ந்ததாக இப்பாடல் அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பவர்.

இப்பாட்டில் சோழநாட்டின் சிறப்பு, காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, கரிகாற்சோழனின் வீரச்செயல்கள், உறையூரை அவன் வளப்படுத்தினமை முதலியவை கூறப்பட்டுள்ளன. கரிகாலனது வாழ்க்கை, காவிரியின் சிறப்பு, சோழநாட்டுக் குடிவளம், பரதவர் செயல்கள், கடல் வாணிகம், வணிகர் நல்லியல்புகள், நகரத்தில் உயர்த்தப்பட்ட பலவகைக் கொடிகள் பற்றிய விவரங்கள், கரிகாலன் உறையூரில் செய்த நற்பணிகள் முதலிய செய்திகள் இப்பாட்டில் விளக்கமாக இடம் பெற்றுள்ளன.

10. மலைபடுகடாம் : 583 அடிகளைக் கொண்டுள்ள இந்நெடிய பாடல், செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னன் என்பவனிடம் பரிசில் பெற்ற கூத்தன் ஒருவன், பரிசில் பெற வரும் கூத்தனை அவ்வேளினிடம் ஆற்றுப் படுத்தியதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர்

த-21 -