பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தமிழ் மொழி- இலக்கிய வரலாறு


எனப் பெயர்பெற்றது என்று சங்க நூலான சிறுபாணாற்றுப் படையிலேயே (வரி 172-173) புராணகதை இடம் பெற்றுள்ளதைப் புலவர் அனைவரும் அறிவர். சமயத்தொடர்பான இத்தகைய கதைகள் சங்க காலத்திற்குப் புதியவை அல்ல என்பதைப் புறதானுாற்றுப் பாடல்களாலும் (174 முதலியன) அறியலாம். இங்ங்னமே காவிரி பற்றிய புராண கதையும் எனக்கோடலே ஏற்புடையது.

9. நாம் வாழும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் நகரத்துப் பழக்கவழக்கங்களுக்கும், சிற்றுார்ப் பழக்கவழக்கங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. நம்மிடையே புரோகித மனம் வழக்கிற்கு வந்து பல நூற்றாண்டுகள் ஆயினும், இன்றும் புரோகிதர் இன்றியே திருமணம் செய்யும் தமிழர் பலர் இத் தமிழ்நாட்டில் உண்டு. நகரத்தில் நடைபெறும் புரோகித மணமும், சிற்றுரர்களில் நடைபெறும் புரோகிதன் அற்ற மணமும் இந்த நூற்றாண்டுப் புலவர் இருவரால் பாடப்படுகின்றன என்று கொள்வோம். 21ஆம் நூற்றாண்டில் இப்பாடல்களைக் காணும் அறிஞர் ஒருவர், இவ்விரண்டிற்கும் வேறுபாடு காணப்படலால் இவ்விரண்டும் வெவ்வேறு காலத்தன என்று கூறுதல் எங்ங்னம் பொருத்தமற்றதோ, அங்ஙனமே பிள்ளையவர்கள் முடிவும் பொருத்தமற்றதாகும். மேலும், கோவலன் திருமணச் செய்திகள் சமண முறைப்படி அமைந்தவை என்பது அறிஞர் சிலர் கருத்தாகும்.

10. மேலே திருமணம் பற்றிக் கூறப்பெற்ற மறுப்பே இதற்கும் பொருத்தமாகும். 'பரதசாத்திரம் கி. மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 2ஆம் நூற்றாண்டிற்கு உட்பட்ட காலத்தில் இப்பொழுது காணப்படும் உருவை அடைந்திருக்கலாம் என்று அறிஞர் கூறுகின்றனர்8எனவே, கி. பி. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செய்யப்பெற்ற சிலப்பதிகாரத்தில் பரதநாட்டியம் பற்றிய செய்திகள் இருத்தலில் வியப்பில்லை அன்றோ?


8. கலைக்களஞ்சியம் 6, பக்.746.