பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

365

காபாலிகர் சுடலைநோன்பிகள் என்று இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளனர். மாவிரதிகள் ‘விரத யாக்கையர்’ என்று பேசப்பட்டுள்ளனர் (காதை 6). எனவே, சைவத்தின் உட்பிரிவுகளாகிய காபாலிகமும் மாவிரதமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் இருந்தன என்பதற்கு மணிமேகலை ஏற்ற சான்றாகும்.

ஏழு என்ற எண்ணிக்கை பெளத்த சமயத்தில் மதிப்பு மிக்கதாகும் (9-18, 13-14, 22-72).

பாண்டு கம்பளம்: தேவேந்திரன் இருக்கைமீது வெள்ளைக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். இது ‘பாண்டு கம்பளம்’ எனப்படும். நிலவுலகில் ஐந்தவித்த பெரியோர் தோன்றுவராயின், அப்பாண்டு கம்பளம் அசையும். இந்திரன் அதன் அசைவால் உண்மையை உணர்ந்து, ஐந்தவித்த பெரியோனைக் காணச் செல்வான். அவனுக்கு வேண்டும் உதவியைச் செய்வான் (காதை 14, வரி 25-35). இப்பாண்டு கம்பளச் செய்தி சமணசமய நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

விருப்பப்படி பிறப்பு: மனிதன் ஒரு பிறப்பில் எதனை அழுத்தமாக விரும்புகின்றானோ அவ்விருப்பப்படியே அடுத்த பிறவியில் பிறப்பன் என்பது அக்கால மக்கள் நம்பிக்கை. ஆபுத்திரன் ஒரு பசுவினால் வளர்க்கப்பட்டவன். அவன்,

“தற்காத் தளித்த தகைஆ அதனை
ஒற்கா வுள்ளத் தொழியான் ஆதலின்
ஆங்கவ் வாவயிற் றமரர்கணம் உவப்பத்
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக்

கொருதா னாகிஉலகுதொழத் தோன்றினன்.”
—காதை 15, வரி 17-21

அறத்தின் சிறப்பு : இந்நூல் முழுமையும் அறத்தையே வற்புறுத்துகிறது. அறம் என்பது நல்வினை: நல்வினை ஒன்றே உயிர்க்கு உறுதியாவது என்று இந்நூல் வற்புறுத்து-