பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

நோக்க, இன்றுள்ள சங்கச் செய்யுட்களுள் சில கிறிஸ்தும் பெருமானுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளையும் சேர்ந்தவை என்னும் உண்மை உணரப்படும்.

மேலும் ஒரு மொழிக்குரிய நூல்கள் திடீரென்று கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளை மட்டும் குறிக்குமென்றோ, அந்நூற்றாண்டுகளில் செய்யப்பெற்ற பாடல்கள் மட்டுமே கிடைக்கக்கூடுமென்றோ எண்ணுதல் பொருத்தமற்றது.

செங்குட்டுவன் செய்த பத்தினி விழாவிற்குக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் வந்திருந்தான் என்பது சிலப் புதிகாரம் கூறும் செய்தியாகும். அக்கயவாகுவின் காலம் கி. பி. 113-136 என்று அண்மையில் வெளிவந்த இலங்கை வரலாற்று நூல் தெரிவிக்கின்றது. எனவே, செங்குட்டுவன் காலமும் அவன் தம்பியாரான இளங்கோவடிகள் காலமும் அவ்விருவருக்கும் நண்பராகிய ‘மணிமேகலை’ ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் காலமும் அதுவேயாகும் என்பது வெள்ளிடை மலை.

மணிமேகலையில், “தெய்வம் தொழா அள்” என்று தொடங்கும் குறள் முழுமையும் ஆளப்பட்டுள்ளதை அனை வரும் அறிவர். மேலும், சிலப்பதிகாரத்தில் குறட் கருத்துக்களும் தொடர்களும் பல இடங்களில் ஆளப்பட்டுள்ளன. இவற்றை நோக்க, திருக்குறள் இவ்விரு நூல்களுக்கும் முற்பட்டது என்பது தெளிவாகும்.

திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க நூல்களுக்கெல்லாம் முற்பட்டது தொல்காப்பியம் என்பதை மகாவித்துவான் இரா. இராகவய்யங்கார், டாக்டர் சோமசுந்தர பாரதியார், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் திரு. க. வெள்ளைவாரணனார், பேராசிரியர் சி. இலக்குவனார், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சியாளர் வே. வேங்கடராசுலு ரெட்டியார் ஆகிய அறிஞர்கள் தம் ஆராய்ச்சி மிக்க நூல்களில் நன்முறையில் வெளியிட்டுள்ளனர். வரலாற்று முறைப்படி ஆராயின், தொல்காப்பியத்-