பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

தின் குறைந்தகால எல்லை ஏறத்தாழக் கி. மு. 300 என்று கூறலாம்.[1] இதற்குக் கீழே தொல்காப்பியத்தின் காலத்தைக் கொண்டு செல்வது வரலாற்று உண்மைக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் முரண்பட்டதாகும்.

ஏறத்தாழக் கி. மு. 300இல் செய்யப்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் தமக்கு முன்பும் தம் காலத்திலும் இருந்த இலக்கண நூல்களைச் செய்த ஆசிரியர் பலரை ஏறத்தாழ இருநூற்றைம்பது இடங்களில், “என்ப”, “என்மனார் புலவர்”, “யாப்பறி புலவர்” எனப் பலவாறு கூறியுள்ளார். எனவே, தொல்காப்பியம் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த இலக்கண நூல்கள் மிகப்பல என்பது தெளிவாகும். இங்ஙனமே தொல்காப்பியர் காலத்தில் மிகப்பல இலக்கிய நூல்களும் இருந்தன என்பதை அவருடைய செய்யுளியல் நூற்பாக்கள் நன்கு தெரிவிக்கின்றன. தொல்காப்பியர் காலத்திலேயே (கி. மு. 300) பல இலக்கண நூல்களும் பல இலக்கிய நூல்களும் இருந்தன எனில், தமிழ் மொழியின் தொன்மையை என்னென்பது!

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியினரான தமிழர்தம் மொழியாகிய தமிழின் தோற்றத்தை அறியவல்லார் யாவர்? இதனாலன்றோ கல்வியிற் சிறந்த கம்பர் பெருமான், “என்றுமுள தென்றமிழ்” என இயம்பி மகிழ்ந்தார்!

இத்துணை உண்மைகளையும் மறந்து அல்லது மறைத்துச் ‘சங்ககாலம்’ கி. பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தது. தொல்காப்பியம் தொகை நூல்களுக்குப் பிற்பட்டது என்று தம் மனம் போனவாறு ஒரு சிலர் எழுதுதல் உண்மை ஆராய்ச்சிக்கு மாறுபட்டதாகும்.

கி. பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சியில் பல்லவ அரசு ஏற்பட்டது என்பது வரலாற்று உண்மை.


  1. ‘தொல்காப்பியம்’ என்னும் தலைப்புடைய பகுதியிற் காண்க.