பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

சிறந்தவை மிளகும் மணப் பொருள்களும் ஆகும். தமிழ் வணிகர் இவ்விரண்டிற்கும் பதிலாகப் பட்டும் சர்க்கரையும் பெற்றனர்.

தமிழர் கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளாகவே பர்மாவுடனும் இந்தோசீனத்துடனும் வாணிகம் செய்தனர். அவர்கள் அந்நாடுகளில் பல இடங்களில் குடியேறி வணிக நிலையங்களை அமைத்துக்கொண்டனர். அவற்றுள் தக்கோலா (தக்கோலம்) என்பது ஒன்று. இவ்விடப் பெயர் சென்னைக்கு அருகில் உள்ள தக்கோலம் என்னும் ஊரின் பெயரை நினைவூட்டுகிறது.4

கிறிஸ்துவுக்குப் பின்பு

தமிழகம் ரோமப் பேரரசுடன் கிறிஸ்துவுக்குப் பின்னும் தொடர்ந்து வாணிகம் செய்துவந்தது. இரும்பு, விலங்குகளின் தோல்கள், ஆட்டுமயிர், நெய் முதலியன ரோமப் பெருநாட்டிற்கு அனுப்பப்பட்டன. யானைத் தந்தம் மிகுதியாக அனுப்பப்பட்டது. உருவச்சிலைகள், தேர்கள். வண்டிகள், மேசைக் கால்கள், பெட்டிகள், பறவைக் கூண்டுகள், சீப்புகள் முதலியன ரோமப் பெருநாட்டில் தந்தத்தால் செய்யப்பட்டன.

சேரநாட்டிலிருந்த முசிறி முதலிய துறைமுகங்களிலிருந்து தந்தம் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆமை ஓடுகள் மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டன. ரோமப் பெருநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவற்றுள் மிக்க விலையுயர்ந்தவை முத்துகளேயாகும். மதுரை, உறையூர் என்னும் இரண்டு தலைநகரங்களிலும் முத்து வாணிகம் குடிகொண்டிருந்தது.5

ரோமர்கள் முத்துகளையும் யானைத் தந்தத்தையும் மஸ்லின் ஆடைகளையும் மிளகையும் மிகுந்த விலை

4. P. T. S. Ayyangar, History of tho Tamils,

pp. 205–206

5. Ibid., pp. 301–304.