பக்கம்:தமிழ் அங்காடி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  147


என்னும் எதுகைகளை நோக்கித் 'தய்த்த’ எனப்பட்டது. இந்தக் காலத்தில், எழுத்து வரிசையிலிருந்து ‘ஐ’ என்னும் எழுத்தைக் கல்லறைக்கு அனுப்பிவிட்டு, அதற்குப் பதிலாக ‘அய்’ என எழுதுகிறார்களே - இந்த முறையைப் பின் பற்றிக் கம்பர் 'தய்த்த’ என எழுதவில்லை - மேலுள்ள எதுகைச் சொற்களை நோக்கி இவ்வாறு எழுதினார்.

வாய்ப்பு நேரும்போது சொல்லவேண்டிய இன்றி யமையாச் செய்திகளை நழுவவிடாமல் சொல்லியாக வேண்டும். இப்பாடலில் உள்ள 'முருங்கின' என்னும் சொல்லினை எடுத்துக்கொள்வோம். இங்கே முருங்குதல் என்பது அழிவைக் குறிக்கிறது. முருங்கைமரம் எளிதில் முரிந்து விடக்கூடியது - காற்றடிக்காத போதும், கீரையையும் காய்களையும் தாங்க முடியாமல் திடீரென முரிந்து விடும். கிளைகளைச் சிறாரும் எளிதில் வெட்டவும் ஒடிக்கவும் முடியும். எனவே, இவ்வாறு முருங்குவதால் முருங்கை மரம் முருங்கை எனப்பட்டது.

மர இன அறிவியலார் (Botanists) 'முரிங்க’ என்னும் மலையாளச் சொல் மொரிங்கா என ஐரோப்பிய மொழிகளில் திரிந்ததாகக் கூறுகின்றனர். தமிழில் உள்ள மாங்காய், நடுங்கு என்பன, மலையாளத்தில் ‘மாங்க’, ‘நடுங்க' எனத் திரிந்தது போல், தமிழ் முருங்கை மலையாளத்தில் முரிங்க எனத் திரிந்தது. எனவே, முருங்கை என்பது தமிழ்ச் சொல்லே.

மற்றும் வீர சோழியம் என்னும் நூலின் உரையாசிரிய ராகிய பெருந்தேவனார் என்பவர், ‘முருங்கா என்னும் சிங்களச் சொல் முருங்கை என வந்தவாறுங் காண்க எனத் தத்திதப் படலத்தில் கூறியுள்ளார். இது தவறு. சிங்களத்தில் பலமொழிச் சொற்கள் கலந்துள்ளன. அவற்றுள் முருங்கை என்னும் தமிழ்ச் சொல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/149&oldid=1204216" இலிருந்து மீள்விக்கப்பட்டது