பக்கம்:தமிழ் அங்காடி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  83



கும்ப கருணன் கூற்று

படைத் தலைவர்கள் போரைப் பரிந்துரைக்க, இராவணனின் பெரிய தம்பியாகிய கும்பகருணன், தமையன் சீதையை எடுத்து வந்தது தவறு என்ற கருத்துடையவனாயினும், நிலைமையைச் சீர்தூக்கி ஆராய்ந்துகூறலானான்:

அண்ணா! உன் தம்பி என்ற முறையில் யான் சில சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சீதையை நீ எடுத்து வந்தது தவறு. இதனால் நம் குலம் அழியும். நீ செய்தது மேலான செயலன்று. நமது குலத்திற்குக் கெட்ட பெயர் தேடினாய். சரி, நடந்தது நடந்து விட்டது. சீதையை இனி நாம் இராமனிடம் அனுப்பிவிடுவோமாயின், நாம் வலிமையின்றி இராமனுக்கு அஞ்சி விட்டுவிட்டதாக இழிந்த பெயர் ஏற்படும். எனவே, பகைவருடன் போரிட்டு மடிந்து விடுவோமாயின், அதுவும் ஒருவகையில் நல்லதே. பழியும் தீரும்.

                “சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்
                மட்டவிழ் மலர்க் குழலி னாளை இனி மன்னா!
                விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்லப்
                பட்டிடுதுமேல் அதுவும் நன்று பழி யன்றால்"

(53)


சிட்டர் = மேலானவர். குழலினாள் = சீதை. எளியம் ஆதும் = இரங்கத்தக்க எளியவர்கள் என்ற பெயர் உடையவ ராவோம்.

கும்ப கருணனின் கூற்று மிகவும் வியப்பா யுள்ளது. தமையனைக் கண்டிக்கவேண்டிய அளவுக்குக் கண்டித்தும் விட்டான் - செயல் தவறு எனச் சுட்டியும் காட்டி விட்டான்; ஆயினும், அண்ணனது புகழையும் குலப் பெருமையையும் விட்டுக் கொடுக்காமல் செயல் பட்டுள்ளான். இத்தகைய ஒரு நிலையை உலகியலிலும் உடன் பிறந்தார்கட்குள் காணலாம். தமையனும் தம்பியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/85&oldid=1202359" இலிருந்து மீள்விக்கப்பட்டது