பக்கம்:தமிழ் அமுதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

புனைந்துரைக்கப்பட்டுள்ளன. செளராஷ்டிரர் அக்கல்வெட்டில் 'பட்டவாயகர் ‘ என்று குறிக்கப்பட்டுள்ளனர். இதன் நேரான தமிழ்ப் பெயர் 'பட்டுநூல்காரர்’ என்பது.

தேவகிரியில்

மந்தசோர் நகரம் முஸ்லிம்களின் படையெடுப்பினால் அழிந்தபோது, இச் செளராஷ்டிரர் தெற்கு நோக்கிப் பயணமாயினர். அப்பொழுது இன்றைய பம்பாய் மாகாணத்தின் வடபகுதியையும், வட ஐதராபாத் சீமையையும் யாதவர் என்னும் அரச மரபினர் ஆண்டுவந்தனர். அவர்தம் தலைநகர் தேவகிரி. அதுவே இக்கால தெளலதாபாத் என்பது. கி. பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்-காபூர் விந்தியமலைக்குத் தென்பால் படையெடுத்தபோது முதலில் தாக்குண்ட நகரம் தேவகிரிதான். அங்கிருந்த செளராஷ்டிரர் மீண்டும் தெற்கு நோக்கிச் சென்று விசய நகரத்திற் குடியேறினர்.

மீண்டும் தெற்கு நோக்கி

மாலிக்-காபூர் படையெடுப்புக்குப் பிறகு விசய நகரப் பேரரசு அமைக்கப்பட்டது. அஃது ஏறத்தாழ 200 ஆண்டுகள் வளமாக இருந்தது. தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு அப்பேரரசு அழிவுற்றது; விசய நகரம் முஸ்லிம்களால் அழிக்கப்பட்டது. மக்கள் தெற்கு நோக்கி ஓடினர். அங்ஙனம் ஓடியவருள் மேலே சொல்லப்பட்ட செளராஷ்டிரரும் இருந்தனர். அவர்கள் வட ஆற்காடு, சேலம், பெங்களுர், மதுரை முதலிய இடங்களில் சென்று தங்கினர். எனவே, ஏறத்தாழ 16 அல்லது 17-ஆம் நூற்றாண்டில் இவர்கள் தமிழகத்திற்கு வந்தனராதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/31&oldid=1459150" இலிருந்து மீள்விக்கப்பட்டது