பக்கம்:தமிழ் அமுதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

காட்சியைப் புலப்படுத்தும் சிற்பம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கவல்லது. இஃது ஏறத்தாழத் தொள்ளாயிரம் ஆண்டுகட்குமுன் செய்யப்பட்டதாயினும், நேற்று மாலை தான் செய்யப்பட்டது என்று கூறத்தக்க பேரழகோடு விளங்குகிறது எனின், சோழர்காலச் சிற்பத்திறனை என்னென்பது! பின் வந்த விசய நகர ஆட்சியிலும் நாயக்க மன்னர் ஆட்சியிலும் அமைந்த சிற்பங்களைக் கோவையையடுத்த பேரூரிலும் தாரமங்கலத்திலும் மதுரைப் புது மண்டபத்திலும் திண்டுக்கல்லையடுத்த தாடிக்கொம்பிலும் காணலாம்.

ஓவியக் கலை

பல்லவர்கால ஓவியக்கலை நுட்பத்தைச் சித்தன்ன வாசல் குகைக் கோவிலில் உள்ள நடிகையர் ஒவியங்களைக் கொண்டும் மேற்கூரை ஒவியங்களைக் கொண்டும் தெளிவாக அறியலாம். ஒவிய ஆராய்ச்சி நிபுணரான வட நாட்டு அறிஞர் பலர் இவ்வோவியங்களில் அமைந்துள்ள வேலை நுட்பத்தை உளமாரப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் வரையப்பெற்ற இவ்வோவியங்கள் இன்றளவும் கண்கவரத்தக்க நிலையில் இருத்தலைக் காண, இவற்றைத் தீட்டிய ஓவியக்கலைவாணரது தொழில் திறமை வெள்ளிடை மலைபோல் விளக்கமாகின்றது.

பின்வந்த சோழர் காலத்தில் ஓவியக்கலை எவ்வாறு இருந்தது என்பதைத் தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள ஒவியங்கள் இனிது விளக்குகின்றன. இறைவன் சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்ட வரலாறு தஞ்சைப் பெரிய கோவில் சுவரில் ஒவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. சோழர்கால ஆடல் பாடல் மகளிரை உணர்த்தும் ஓவியம் அழகு வழியத் தீட்டப்பட்டுள்ளது. இவ்வோவியங்களி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/39&oldid=1459158" இலிருந்து மீள்விக்கப்பட்டது