பக்கம்:தமிழ் அமுதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

லிருந்து அக்கால ஆடவர் பெண்டிர் அணிவகைகளும் உடைவகைகளும் கூந்தல் ஒப்பனைகளும் பிறவும் நன்கு அறியலாம். நாயக்கர் கால ஓவியக்கலை மாண்பை மதுரை மீனாட்சியம்மன் கோவிற் சுவர்கள்மீது வரையப்பட்டுள்ள திருவிளையாடற் புராண ஒவியங்களைக் கொண்டு உணரலாம். இவை அக்கால மக்களுடைய உடைச் சிறப்பையும் அணிவகைகளையும் பிறவற்றையும் நன்கு உணர்த்தவல்லன.

இசைக் கலை

தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதனால் தமிழர் இசைத்தமிழை நடுநாயகமாக வைத்துப் போற்றி வந்தனர் என்பது தெளிவன்றாே ? சங்க காலத்தில் இசைத்தமிழ் நூல்கள் பல இருந்தன; இசைத்தமிழ்ப் புலவர் பலர் இருந்தனர். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் முதலிய ஏழிசைகளையும் முல்லைப்பண் முதலிய பண்வகைகளையும் சங்க நூல்களில் பரக்கக் காணலாம். யாழ், முழவு, தண்ணுமை, குழல் முதலிய இசைக்கருவிகள் மிகப் பலவாகத் தமிழகத்தில் வழக்கில் இருந்தன. இசைத்தமிழைப் போற்றிவளர்த்தவர் பாணர் என்பவர். பாணரும் பாடினியரும் தமிழரசரால் பாதுகாக்கப்பட்டனர். எனவே, இசைத்தமிழ் நன்கு வளர்ச்சியுற்றது. நாயன்மார் காலத்தில் தமிழிசை செல்வாக்குப் பெற்றிருந்தது. விசயநகர ஆட்சிக் காலத்தில்தான் கருநாடக இசை தமிழகத்தில் கால்கொண்டது. அது முதல் தமிழிசை மறைந்து கருநாடக இசை தமிழகம் முழுதும் பரவியது. இராசாசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களது பெருமுயற்சியால் இப்பொழுது தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/40&oldid=1459159" இலிருந்து மீள்விக்கப்பட்டது