பக்கம்:தமிழ் அமுதம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நடனக் கலை

இசையோடு இணைந்து நிற்பது நடனம். மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நடனம். உள்ளத்து உணர்ச்சி உடம்பில் புலப்படுதலே மெய்ப்பாடு. தொல்காப்பியத்தில் இதுபற்றிய ஓர் இயலே இருக்கின்றது. ஒன்பது வகைச் சுவைகளையும் கைகால் அசைவுகளாலும் முகத்தோற்றத் தாலும் தெரிவிப்பதே நடனம். இக்கலைக்கு மிகுந்த விறல் (திறமை) வேண்டும். இங்ஙனம் விறல் தோன்ற நடித்தவஅ விறலி எனப்பட்டாள். இவ்விறலியர் பாணரையடுத்தே வள்ளல்களை நாடிச் சென்று நடித்துப் பரிசும் புகழும் பெற்றனர். இவர்தம் பேரழுகும் கலைத்திறனும் சங்க நூல்களில் சிறப்பாகப் பேசப்படுகின்றன. மாதவி ஆடிய நடனம் சிலப்பதிகாரம்-அரங்கேற்று காதையில் செவ்விய முறையில் பேசப்படுகின்றது. பல்லவர் காலத்து நடனக்கலையை அறிய நடனச் சிற்பங்களும் நடிகையர் ஒவியங்களும் பெருந்துணை புரிகின்றன. சித்தன்ன வாசலில் உள்ள நடிகையர் ஒவியங்கள், அக்கால நடன மாதருடைய கூந்தல் ஒப்பனை, அணிச் சிறப்பு, உடைச் சிறப்பு முதலியவற்றை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குகின்றன.

பிற்காலத்தில் பரதநாட்டிய முறையைப் பெருங் கோயில்களில் உள்ள எண்ணிறந்த சிற்பங்களைக் கொண்டு உணரலாம். தில்லையில் உள்ள சிவகாமியம்மன் கோவிலிலும் மேலைக்கோபுர வாயிலிலும், திருவண்ணாமலைக் கோபுரவாயிலிலும் இவ்வகை நடனச் சிற்பங்கள் மிகப் பலவாகக் காண்கின்றன. இந்நடிகக் கலையை ஒரு தனிக் கூட்டத்தார் நெடுங்காலமாக வளர்த்து வந்தனர். இன்று இக்கலை பல வகுப்பாராலும் ஆவலோடு கற்கப்படுகின்றது. வாழையடி வாழையாக வந்த கூத்தியர் இனம், தேவதாசி முறை ஒழிப்பால் சீரழிந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/41&oldid=1459160" இலிருந்து மீள்விக்கப்பட்டது