பக்கம்:தமிழ் அமுதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

பாண்டி மாதேவியும் மனம் பதைத்து உயிர்விட்டாள் ; சீற்றம் தணியாத கண்ணகி தவறுடை மக்கள் வாழ்ந்து வந்த மதுரைப் பகுதியை எரித்தாள். மதுரையின் அதி தேவதை (மதுராபதி என்னும் பெண்தெய்வம்) கண்ணகியின் முற்பிறப்பு வரலாற்றைக் கூறியது ; கண்ணகி வருத்தம் தணியாதவளாய் மேற்குக் கோட்டை வாசல் வழியாக வெளியே சென்றாள்; அங்கிருந்த துர்க்கையின் கோயிலில் வாழ்வரசிக்கு அடையாளமாக இருந்த தன் கைவளையல்களை உடைத்து எறிந்தாள் ; பின்பு வையையின் வடகரை வழியே நடந்து மலைநாட்டை அடைந்தாள்; இச்செய்திகளைக் கூறும் சிலப்பதிகாரப் பகுதி மதுரைக் காண்டம் எனப்படும்.

மலைநாட்டை அடைந்த கண்ணகி ஒரு வேங்கை மரநிழலில் நின்றாள் : அப்பொழுது வானத்திலிருந்து ஒரு விமானம் வந்தது. அதில் தேவர்களுடன் கோவலன் இருந்தான்; அவன் கண்ணகியை விமானத்திலேற்றிக் கொண்டு மறைந்தான் ; இக்காட்சியைக் கண்ட மலை நாட்டு மக்கள் தம் வேந்தனான சேரன் செங்குட்டுவனிடம் விளக்கிக் கூறினர்; உடனிருந்த மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்ற புலவர் கண்ணகி வரலாற்றை விரித்துக் கூறினார்; சேரமாதேவி கண்ணகியைக் கோவில் கட்டி வழிபடவேண்டும் என்று கூறினாள்; வடநாட்டு ஆரிய மன்னர் தமிழரசர் வீரத்தை இகழ்ந்து கூறியதாகச் சேர மன்னன் கேள்வியுற்றான் , அதனால் வடநாடு சென்று ஆரிய மன்னரை வென்று இமயமலையிலிருந்து பத்தினியின் உருவத்தைச் செதுக்கத்தக்க கல்லைக் கொண்டுவரப் புறப்பட்டான் ; அவன் பிரயாணம் பதினெட்டு மாதம் நடைபெற்றது. கனகவிசயர் என்ற ஆரிய மன்னரைச் சிறைப்படுத்தி அவர்கள் தலையில் சிலைக்குரிய கல்லைக் கொண்டுவந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/50&oldid=1459169" இலிருந்து மீள்விக்கப்பட்டது