பக்கம்:தமிழ் அமுதம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தனிமனையில் வாழ்ந்த விவரம், மாதவியின் அரங்கேற்றம், அவள் ஒப்பனை செய்துகொண்ட விவரம், மாதவியும் கோவலனும் கடற்கரையில் பாடியனவாகக் கூறப்படும் பாடல்கள், அவற்றின் பொருள் நுட்பம், வேங்கடத்திலும் அரங்கத்திலும் உள்ள திருமால் வருணனை, கணவனை இழந்த கண்ணகி மதுரைத் தெருக்களில் புலம்பிச் சென்ற துன்பக் காட்சி, மலைநாட்டு வருணனை இன்ன பிறவும் இளங்கோ அடிகளது இணையற்ற பெரும் புலமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும். சங்ககால இறுதியில் செய்யப்பட்ட இப்பெருங் காவியம் தமிழகத்துக் குடிமகள் ஒருத்தியைப் பற்றியது — ஒரு தமிழ்ப் பெண்மணியைப் பற்றியது. இராமாயணம், பாரதம், சிந்தாமணி, சூளாமணி போன்றவை வடநாட்டுக் கதைகள் ; முதலில் வட மொழியில் எழுதப்பெற்றவை. ஆனால், சிலப்பதிகாரம் முதலில் தமிழில் எழுதப்பட்டது . இது தமிழ்நாட்டுக் கதை; தமிழகத்தைப் படம் பிடித்துக் காட்டுவது. சுருங்கக் கூறின், மேலே கூறப்பெற்ற எல்லாச் சிறப்புக் களையும் தன்னகத்தே பெற்றுள்ள தமிழ்க் காப்பியம் இதனைத் தவிர வேறொன்றுமில்லை என்று துணிந்து கூறலாம்.

மணிமேகலை

மதுரையில் கோவலன் கொலையுண்ட பொழுது மதுரைக் கடைத்தெருவில் நெல் முதலிய கூலவகைகளை விற்றுவந்த வணிகருள் சாத்தனார் என்பவர் ஒருவர் ; அவர் கூலவாணிகம் செய்த காரணத்தால் (மதுரைக்) கூல வாணிகன் சாத்தனார் எனப்பட்டார். அவர் சேரன் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் உற்ற நண்பர் : கண்ணகி விண்ணகம் சென்ற காட்சியைக் குன்றக்குறவர் செங்குட்டுவனிடம் கூறியபொழுது சாத்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/53&oldid=1459172" இலிருந்து மீள்விக்கப்பட்டது