பக்கம்:தமிழ் இனம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தமிழ் இனம்

செய்தேன் ; இவ்வழு வொழுக்கம் தவறானது என்பதைச் சிறிதும் எண்ணிலேன்; இத்தகைய கொடிய யான் உன்னிடம் வந்து ‘எழுக’ என்றதும், மறு மொழி ஒன்றும் உரையாமல் என்னுடன் வந்தனையே!” என இரங்கிக் கூறினான். அப்போது அம்மடவாள், ! “உமது பிரிவால் வருந்திய என்னை நும் பெற்றாேர் வந்து கண்டனர் , யான் எனது அகவருத்தத்தைப் புறத்தே காட்டாது புன்முறுவல் பூத்தேன் ; அதுவறிதே தோற்றிய முறுவல் என்பதை அவர்கள் உணர்ந்து வருந்தினர். யான் உமது வார்த்தையைச் சிறிதும் மாற்றாத உள்ள வாழ்க்கையை உடையேன் ஆதலின், உம்முடன் உடன்பட்டுப் பெருவிருப்போடு வந்தேன்,” என இன்முறுவல் தோன்ற இயம்பினாள்.

அவ்வளவில் அவன் மனம் அடைந்த மகிழ்ச்சிக்களவில்லை. அவன், உள்ளத்தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகைக்கடல் பெருக,

“அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்ளுெடு போந்திங்கு என்துயர் களைந்த
பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய் !
நாணின் பாவாய் ! நீணில விளக்கே !
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி !”

எனப் பலபடப் பாராட்டிச் சீராட்டி, “நின் சீறடிச் சிலம்பில் ஒன்றுசுொண்டு யான் விலைகூறி வருவேன். மயங்கா தொழிக,” என மலர்முகத்துடன் கூறி, அவளைத் தழுவி, துணைவர் இல்லா அவளது தனிமைக்கு வருந்தியவனாய்க் கண்ணீர் தோன்ற விடாது கரந்தவனாய்ப் புறப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/61&oldid=1390585" இலிருந்து மீள்விக்கப்பட்டது