பக்கம்:தமிழ் இனம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தமிழ் இனம்

கருத்து. அதனால் அவள், “ முதலில் உன் சிலம்பு தானா என் கணவனிடம் காணப்பட்டதென்பதைத் துணிந்தனையோ?” என்று கேட்பதற்குப் பதிலாக, இங்ஙனம் நயமாய்க் கூறி, விஷயத்திற்கு வந்து பாண்டியனை மடக்கியது எண்ணிக் களிக்கற்பாலது.

உண்மையை இங்ஙனம் உணர்த்தித் தன் கணவன் தவறிலன் என்பதை மெய்ப்பித்த சமயம், மன்னன் மனம் நொந்து மாண்டான் ; தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடுபவளைப் போலக் கோப்பெருந்தேவி குலைந்து நடுங்கி அவ்விடத்தே உயிர் விட்டாள். சீற்றம் தணியாச் சீறடி அரிவையான கண்ணகி கோப்பெருந்தேவியை நோக்கி,

“மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்;
பட்டாங்கு யானுமோர் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையும்”


என்று சீறியவளாய்த் தனது இடமார்பத்தைத் திருகி மதுரைமீது எறிந்தாள். அவ்வளவில் மதுரை எரிவாய்ப்பட்டது. மதுரையைக் கண்ணகியின் ‘கற்பு’ உண்டது என்னும் இளங்கோவடிகளின் இன்னுரை இன்பம் தருவதாகும். மதுரைப் பத்தினிப் பெண்டிர் அனைவரும் கண்ணகியைச் ‘சிலம்பில் வென்ற சேயிழை’ எனப் புகழ்ந்தனர்.

இந்நிலையிலும் கண்ணகியின் சீற்றம் தணிந்திலது. ‘மதுராபதி’ என்னும் தெய்வம் கண்ணகி முன் நிற்கமாட்டாது பின்னிலையில் நின்று பேசியதெனில், அவளது வீரஸ்வரூபம் விளம்பற்பாலதோ? அத்தெய்வம் கோவலனது முன்னை வினையைக் கூறிப் பதினான்காம் நாள் நீலியைப் போலக் கண்ணகியும் மலையுச்சியிற் கணவனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/65&oldid=1359130" இலிருந்து மீள்விக்கப்பட்டது