பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
தமிழ் இலக்கியக் கதைகள்
 

நிறைவும் இன்பமும் எய்துகின்றனவோ அதே மனநிறைவும் இன்பமும் அவர்களுடைய உண்மையான இரசிகர்களுக்கு அவர்களைப் போற்றி உபசரிப்பதன் மூலமாக எய்துகின்றன. அதை நன்கு அறிந்து உணர்ந்திருந்தார் அரிய இரசிகராகிய திருமுதுகுன்றம் (இதற்கு இப்போது விருத்தாசலம் என்று பெயர்) சடைய வள்ளல். ஒரு உண்மை இரசிகனுடைய திருப்தி, கவிதையையும் கற்பனையையும் வானளாவப் போற்றிப் புகழ்ந்து வாய்ச்சொல் விரிப்பதால் மட்டும் கிடைக்காது. கவிதையும் கற்பனையும் பிறந்த உள்ளம் குளிரப் பேணிப் போற்றுவதனால்தான் முழுமையாகக் கிட்டும் என்பது இவருக்குத் தெரியும், சிறந்த பாவலர்கள் பலர் இவரைப் புகழ்ந்து வியந்து பாடுவதற்குக் காரணமாக இருந்த பண்பே இதுதான்.

ஒரு முறை தமிழ்வாணர் என்ற புலவர் அவருடைய கொடைநலம் அறிந்து விருந்தினராக வந்து தங்கியிருந்தார். பெரும்பாலும் புலவர்களை உண்ணச் செய்வதிலிருந்து எல்லா உபசாரங்களையும் மனம் குளிரத் தம் கைகளாலேயே செய்வது சடைய வள்ளல் வழக்கம். தமிழ்வாணர் விருந்தினராக இருந்த நாட்களில் வள்ளல் அவருக்கு உபசாரம் செய்தபோது ஒரு நாள் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. அந்தச் சம்பவத்தையொட்டித் தமிழ்வானர் பாடிய பாடல் இன்றும் தனிப்பாடல் திரட்டில் இருந்த வண்ணம் நமக்கு அதை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

அன்று புலவர் தமிழ்வாணர்க்குத் தாமே உணவு பரிமாறக் கருதினார். சடைய வள்ளல் நீண்ட தலை வாழை இலையை விரித்துப் புலவரை உண்பதற்கு அமரச் செய்தார். வள்ளல் தன் வலது கை விரல்களில் இரண்டு மூன்று மோதிரங்கள் அணிந்திருந்தார். அவற்றுள் திருமகள் வடிவத்தோடு கூடிய பெரிய தங்க மோதிரமொன்று நடுவிரலை அழகு செய்தது. அந்த மோதிரத்தில் சுற்றி வைரக் கற்கள் பதிக்கப்பட்டு நடுவில் தாமரை மேல் நிற்கும் பாவனையாக இலக்குமி உருவம் ஒன்றும் செதுக்கியிருந்தது.