பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158
தமிழ் இலக்கியக் கதைகள்
 

கொண்டிருப்பதைப் பார்த்ததும் தாங்கள் வந்த சமயம் சரியில்லை என்று அவர்களுக்கே பட்டது. திரும்பிப் போய் விட்டுச் சிறிது நேரம் கழித்து வரலாமென்று அவர்கள் திரும்ப எத்தனித்தபோது சம்பந்தனே அவர்களை நிமிர்ந்து பார்த்து விட்டார். சவரம் பண்ணிக் கொண்டிருந்த அவர் அப்படி நிமிர்ந்து தங்களைப் பார்த்துவிட்ட பிறகு தாங்கள் இன்னாரென்று அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் திரும்புவது நன்றாயிருக்காது என்று தோன்றியது, அவர்களுள் கண்ணால் பார்க்க முடிந்தவரான முடவருக்கு. எனவே அவர் சம்பந்தனைப் பார்த்து, "ஐயா! நாங்கள் இருவரும் புலவர்கள். உங்களைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தோம்” என்று கூறினார். சம்பந்தனுடைய முகத்தில் அவர்களைப் புலவர்க்ள் என்று அறிந்து கொண்டதற்கு அறிகுறியாக ஒரு சிறிதேனும் மலர்ச்சியோ புன்னகையோ ஏற்படவில்லை. மாறாகச் செருக்குடனே முறைத்துப் பார்த்தார்.

சம்பந்தனுடைய முகத்திலும் பார்வையிலும் இருந்த வறட்டுத் திமிரை முடவர் மட்டும்தான் காண முடிந்தது. "ஆள் மிகவும் கர்வம் பிடித்தவன் போலிருக்கிறது” என்று குருடருடைய காதருகில் நெருங்கி மெல்லச் சொல்லி வைத்தார் முடவர். குருடரும் நிலைமையை ஒருவாறு புரிந்து கொண்டு விட்டார்.

"ஒகோ! நீங்கள் புலவர்களா? நான் ஒரு நிபந்தனை போடுகிறேன். அந்த நிபந்தனைப்படி உங்களால் ஒரு பாட்டைத் தொடங்கி முடிக்க முடியுமா?" என்று எடுத்த எடுப்பில் யாரோ கூலிக்காரனுக்குக் கட்டளையிடுகிற மாதிரி அநாகரிகமாகவும் முரட்டுத்தனமாகவும் அவர்களைப் பார்த்துக் கேட்டார். சம்பந்தன்.

வரவேற்பு, விசாரணை, அளவளாவுதல் ஒன்றுமின்றித் தங்களைப் பார்த்ததும் பார்க்காததுமாக அவர் அவ்வாறு கேட்டது அவர்கள் மனத்தைப் புண்படுத்தியது. மனம் புண்பட்டாலும் அதை இரட்டைப் புலவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.