பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
166
தமிழ் இலக்கியக் கதைகள்
 

பார்வை செல்லுமிடமெல்லாம் மயில்கள்தோகை விரித்து ஆடும் காட்சியை விராலிமலையில் காணலாம். விராலிமலை முருகனைப் பற்றி ஏழைத் தமிழ்ப் புலவர் ஒருவர் அக்காலத்தில் பாடியிருக்கும் பாடலில் சிறியதோர் அநுபவக் கதை அடங்கியிருக்கிறது. உணர்ச்சித் துடிப்பும் உயிரோட்டமும் உள்ள நிலையை அந்தக் கவிதையில் காண்கிறோம்.

உலகத்தில் இரண்டு வகை வாழ்க்கையைப் பார்க்கிறோம். மனத்தை மட்டும் நிறைத்துக் கொண்டு வயிற்றை நிறைத்துக் கொள்ள வழி தெரியாதவர்கள் ஒரு பக்கம். வயிற்றை நிறைத்துக் கொள்ள வேண்டிய வசதி இருந்தும் மனத்தை நிறைத்துக் கொள்ள வழி தெரியாதவர்கள் ஒரு பக்கம்.ஒரு மனிதன் ஏழையாக மட்டும் இருக்கலாம், அல்லது அறிவாளியாக மட்டும் இருக்கலாம். ஆனால் அறிவாளியாகவும் ஏழையாகவும் சேர்த்து இருப்பதைப் போல் வேதனை வேறு இல்லை. 'வயிற்றுக்காக நாலுபேரிடம் ஏதாவது கேட்டு வசதிகளைப் பெறு’ என்று ஏழ்மை தூண்டும். 'கேட்பதும் கைநீட்டிப் பெறுவதும் கேவலம்' என்று அறிவும் நாணமும் தடுக்கும். 'யாரிடமாவது எதையாவது உதவி பெற்று வருவதற்குப் போ' என்று தூண்டும் தரித்திரமும் 'போகாதே’ என்று பின்னுக்குப் பிடித்திழுக்கும் நாணமுமாக ஊசலாடுகிற வாழ்க்கையில் நிம்மதி எப்படி இருக்க முடியும்? அறிவினால் பெருமிதம் பிறக்கிறது. ஏழ்மையால் இழிவும் தாழ்வு மனப்பான்மையும் பிறக்கின்றன. அறிவினால் சேர்த்துச் செழிக்க வைத்த பெருமிதம் பசியினாலும், இல்லாமையாலும் போய் விடக்கூடாதே என்று கவலைப்படும் நினைவினால் நாணம் பிறக்கிறது.

அந்தக் காலத்தில் விராலிமலையிலிருந்த ஏழைத் தமிழ்ப் புலவரொருவருக்கு இப்படியோர் அநுபவம் ஏற்பட்டது. மனத்தில் புலமை, வீட்டில் ஏழ்மை. அக்கம்பக்கத்து ஊர்களில் வள்ளல்கள் பலர் இருந்தார்கள். வெட்கப்படாமல் அவர்களிடம் போய்க் கேட்டால் ஏதாவது உதவி செய்வார்கள். சும்மா போய்க் கேட்க முடியுமா? 'கற்பகத்தருவே! சிந்தாமணியே' என்றெல்லாம் அந்த வள்ளல்களை வாயாரப் புகழ்ந்து சொல்வி அப்புகழ்ச்சியில்