பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
37
 

இப்பாடல் மூலமாகப் புல்வேளுர்ப் பூதனின் விருந் தோம்பும் பண்பை என்றென்றும் நிலைக்கச் செய்து விட்டார் ஒளவையார். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை அன்போடு இட்டான் பூதன். அந்த அன்புக்கு நன்றி, காலத்துக்கு வளைந்து கொடுத்து அழிந்துபோகாத ஒரு கவிதையாகக் கிடைத்தது. புல்வேளுரில் பூதனிருந்த இடம் புல்முளைத்துப் போயிருக்கலாம். ஆனால் அந்தப் பரோபகார சிகாமணியின் பெயருக்குத் தமிழ்ப் பாட்டியார் கொடுத்த நற்சான்றுச் செய்யுள் தமிழ் மொழி உள்ளவரை அழியப் போவதில்லை. காலத்தை வென்று கொண்டே வளரும் பூதன் புகழ்.

அவன் அளித்த வரகரிசிச் சோற்றையும் கத்தரிக்காய் வதக்கலையும் புளித்த மோரையும் உலகம் பெறும் உணவாகக் குறிப்பிட்டு மகிழ்கிறார் ஒளவையார்.'அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டே பரிவுடன் அந்த உணவை அளித்தான்' என்பதையும் பாட்டிலே நன்கு கூறியுள்ளார் ஒளவையார். நன்றி செய்தவன் அழிவுக்கு அப்பாற்பட்ட நன்றியைப் பதிலுக்குப் பெற்று விட்டான்.

14. கறவைப் பசு ஒன்று தருக!

பொன் விளைந்த களத்துார் படிக்காகத் தம்பிரான் தலை சிறந்த தமிழ்ப் புலவர். புலமைக்கு உரிய தகுதிகளில் வறுமையும் ஒன்று என்ற நியதி ஏற்பட்டிருக்கும்போது அது அவரை மட்டும் விட்டு விடுமா என்ன? வல்லைமாநகர்க் காளத்தியப்பர் கொடையுள்ளம் படைத்த செல்வர். புலவர் மேல் அனுதாபங்கொண்டு சமய சந்தர்ப்பங்களில் உதவி வருபவரும்கூட, தகுதியுள்ள இத்தகைய செல்வர் சிலர் வாழ்ந்ததனாலேதான் தமிழ்ப் புலவர்கள் வறுமையை மறந்து வாழ முடிந்தது. துயரப் பிடியில் சிக்கி உழலாமல் பாடிவர முடிந்தது.

அப்போது படிக்காசுக்குக் குழந்தை பிறந்திருந்த சமயம், அவர் மனைவி தங்கச் சிலைபோல ஒர் ஆண் குழந்தையைப்