பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

69

கழித்ததே ஒழியச் சட்டென்று முடிவதாக இல்லை. சென்னைப் பட்டினத்துச் சோற்றுக் கடைகளில் வேளா வேளைக்கு நல்ல சோறுகூடக் கிடைப்பதில்லை. அதற்காக மூன்றாம் வருஷத்துத் தஞ்சாவூர்ச் சீரகச் சம்பா-பழைய அரிசியில் வடித்த சோறு வேண்டும் என்று அவர் சடைத்துக் கொள்ளவில்லை. ஏதோ, போடுகின்ற சோற்றை வாங்குகின்ற காசை நினைத்தாவது கல்லும் . உமியுமில்லாமல் கஞ்சி நீங்கவாவது வடித்துப் போட வேண்டாமா? கொட்டை கொட்டையாகக் கஞ்சிப் பசை நீங்காமல் கடனுக்கு இடுவதுபோல் வடித்துப் போட்ட அந்தச் சாப்பாடு அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஜீரணமாகாமல் கஷ்டப்படுத்தியது.

இதெல்லாம் போதாதென்று வேறு சில துன்பங்களும் இங்கே சென்னையில் வேதனை கொள்ளும்படி அவரை வருத்தின. கை, கால்களில் சொரி, சிரங்கு தோன்றுவதற்கு அறிகுறியான கொப்புளங்கள் தோன்றி அரிப்பெடுத்துத் தின்றன. அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லையோ? சாப்பாடு படுத்திய பாடோ? தெரியவில்லை.சொரி, சிரங்கு அவர் கை, கால்களைப் பலமாக முற்றுகையிட்டு ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

வேறோர் சங்கதி! அதை வெளியே சொன்னால் வெட்கக்கேடு வந்த காரியத்தை நாலு நாளில் முடித்துக் கொண்டு திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில், மடிசஞ்சியில் இரண்டே இரண்டு வேஷ்டி துண்டுகளை மட்டும் எடுத்து அடைத்துக் கொண்டு வந்திருந்தார். ஒன்று ஏற்கெனவே கிழிசல், இன்னொன்று இங்கே வந்தபிறகு கிழியத் தொடங்கியிருந்தது. காவிரியா ஒடுகிறது. தும்பைப் பூப்போலத் தோய்த்து அலுங்காமல் கொள்ளாமல் அலசி உலர்த்துவதற்கு? கிழிசலை ஒளித்து மறைத்து முழங்காலுக்கு மேலே மடக்கிக் கட்டிக்கொண்டாலோ அசிங்கமாக இருக்கிறது! விலைக்குப் புதிதாக வாங்கிவிடக் கையிற் பொருள் வசதி போதாது. உடம்பிலேயே சாம்பல் பூசியது போலப் படிந்துவிடும் சென்னை மாநகரத்துத் திவ்யமான தெருப்புழுதி வேஷ்டியை வெள்ளையாக வைத்துக்கொள்ளவாவது விடுகிறதா? அதுவும் இல்லை.