பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிதம்பர சபாநாதர்

486

சிதம்பர புராணம்


  
நூற்களுக்கு இது மேற்கோளாகத் தரப்பட்ட நூல். இது இதுபோது கிடைத்திலது. மயிலை நாதர் இதனை நன்னூல் உரையில் குறிப்பிடுவதனால் இது அவருக்கும் முற்பட்டதாகும். மயிலைநாதர் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு.

சிதம்பர சபாநாதர் புராணம் = சிதம்பர நடராஜரது மான்மியத்தைக் கூறும் நூல். இதனைச் சபாபதி நாவலர் என்பார் எழுதியுள்ளார். சிதம்பரத்தையும், நடராசர் நடனத்தின் தத்துவத்தையும் அறியத் துணை செய்யும் புராண நூல். இதன் காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு. சிதம்பரச் செய்யுட் கோவை யாப்பிலக்கண விதிக்கு மேற்கோளாக உள்ள பாடல்கள் பெரும்பாலும் சைன சமயச் சார்புடையனவாக இருத்தலை அறிந்த குமரகுருபர சுவாமிகள், யாப்பிலக்கணத்திற்கு மேற்கோள் பாடல்கள் சைவ சமயப் பரமாக இருத்தல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்நூல் அவரால் பாடப்பட்டது. இலக்கியச் சுவையும், சைவசித்தாந்த கருத்துக்களும் நிறைந்த நூல். ஒருவர், எந்தாய் என்னும் சொற்களின் நயத்தை இந்நூலில் காணலாம். காலம் கி.பி. 18-ம் நூற்றாண்டு . இது தோத்திர நூல்.

சிதம்பரப் பாட்டியல் = பாட்டியல் என்பது 96 வகைப் பிரபந்தங்களை எப்படிப் பாடப்படுதல் வேண்டும் என்ற முறைகளையும், ஒரு நூலின் தொடக்கச் செய்யுளின் முதல் எழுத்து, சீர் முதலானவை எப்படி அமைய வேண்டும் என்ற முறைகளையும் அறிவிக்கும் நூல். இம்முறையில் பல நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று இது. இதனைப் பரஞ்சோதி முனிவர் என்பார் இயற்றியருளினார். காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு. பாட்டியற் நூற்களால் அமுத எழுத்துக்கள் இன்ன, நச்செழுத்துக்கள் இன்ன என்பன போன்ற குறிப்புக்களையும் அறியலாம்.
 
சிதம்பர புராணம் = சிதம்பர மான்மியம் உணர்த்தும் நூல். இதன் ஆசிரியர் திருமலைநாதர் என்பவர்.