பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறுந்தாண்டகம்

504

திருச்சிற்றம்பலம்


வெளிவந்துள்ளது. இது திருக்குறளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கட்குப் பெருந்துணை செய்யவல்லது.

திருக்குறுந்தாண்டகம் = இது வைணவர்கட்குரிய நாலாயிர திவ்யபிரபந்தத்தின் உள்பிரிவுகளில் ஒன்று. திருமாலின் மீது திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தோத்திர நூல். திருநெடுந்தாண்டகம் என்பதையும் பாடியவர் இவரே. காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு.

திருக்கைலாய ஞான உலா = இது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இறைவன் பவனி வந்தபோது பருவ மங்கையர் அவனது பேரழகில் ஈடுபட்டுக் காமுற்றுகின்ற நிலைகளை விரிக்கும் முறையில் பாடப்பட்டுள்ளது. இவ்வுலா நூல் முதல்முதல் தோன்றினமையின், இது ஆதி உலா என்றும் கூறப்படும். இது சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் உள்ள நூல்களுள் ஒன்றாகத் திகழ்வது. இதனைப் பாடியவர் சேரநாட்டு மன்னராய்ச் சிவனடியார்களுள் ஒருவராயுள்ள சேரமான் பெருமாள் நாயனார். காலம். கி.பி.9 ம் நூற்றாண்டு.

திருச்சிற்றம்பலக் கோவையார் = இது திருக்கோவையார் என்றும் கூறப்படும். இதன் அருமை பெருமை அறிந்தே இதற்கு ஆர் விகுதி கொடுத்தும், திரு என்ற அடையாளம் கொடுத்தும் திருக்கோவையார் என்று குறித்துள்ளார். தமிழில் பல கோவை நூல்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் அக்கோவை யார் மீது பாடப்பட்டதோ, அன்றி எத்தலத்தின் மீது பாடப்பட்டதோ, அப்பாட்டுடைத் தலைவன் பெயரையும் தலத்தின் பெயரையும் சார்த்தி வழங்குவர். ஆனால், எந்தவிதமான அடைமொழியும் இன்றிக் கோவை என்ற அளவில் இத் திருக்கோவையாரைத்தான் உணர்த்தும். பாவை பாடின வாயால் கோவை பாடுக என்று மணிவாசகரை நடராஜ பெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இது பாடப்பட்ட நூலாயின் இதன் மாண்பைக் கூறவும் முடியுமோ?